கோவை, அரசூரில் உள்ள கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கட்டிட பொறியியல் துறை ‘காலிகிரேட்ஸ் 2023’ எனும் தேசிய அளவிலான தொழில்நுட்ப போட்டிகளை நடத்தியது.
இப்போட்டியில் 30-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் கட்டுரை சமர்ப்பித்தல், சுவரொட்டி விளக்கக்காட்சி, திட்ட விளக்கக்காட்சி, தொழில்நுட்ப வினாடிவினா, கணினியை கொண்டு வடிவமைத்தல் மற்றும் மீச்சிறு மாதிரி தயாரித்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
சிறப்பு விருந்தினர் “கோம்டேன் கன்சல்டிங் இன்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிட்” நிறுவனத்தின் இயக்குநர் எஸ். ஹரிஹரசுதன் பேசும்போது, வளர்ந்து வரும் சூழலுக்கு ஏற்றவாறு உள்கட்டமைப்புகளை நிலையாக மற்றும் நெகிழ்வாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
முதல்வர் முனைவர் மா.இராமசாமி கட்டிட பொறியியலின் இன்றியமையாமை பற்றி சிறப்புரையாற்றினார். போட்டியானது பல்வேறு துறையை சார்ந்த பொறியியல் மாணவர்களுக்கிடையே அறிவு பரிமாற்றம் மற்றும் கூட்டுமுயற்சிக்கு வழிவகை செய்தது.
சிறப்பு விருந்தினர், கல்லூரி முதல்வர், துறைத்தலைவர் முனைவர் அனுஷா ஆகியோர் வெற்றி பெற்றவர்களை பாராட்டி ஊக்குவித்தனர்.



