கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத் துள்ள சிறுமுகை பகுதியில் சுமார் முந்நூறு ஏக்கர் பரப்பளவில் இயங்கி வந்த சவுத் இந்தியாவிஸ கோஸ் என்ற ஆலை பல்வேறு காரணங்களால் மூடப்பட்டு பத்தாண்டுகளுக்கும் மேலாகின்றன.
பராமரிபின்றி கிடக்கும் இந்த ஆலை வளாகத்தில் மரங்கள் மற்றும் செடிகொடிகள் படர்ந்து அடர்ந்த காடு போல் காட்சியளிக்கின்றது.
இந்த ஆலையின் பின்புறம் ஓடும் பவானியாற்றில் நீர் அருந்த வந்த யானை கூட்டமொன்று இந்த புதர் காட்டினுள் பல மாதங்களாக தஞ்சம டைந்துள்ளன. சிறுமுகை நகர பகுதியில் உள்ள இந்த ஆலையின் புதர்காட்டில் முகாமிட்டுள்ள யானைகள் திடீரென வெளியேறி ஊருக்குள் உலா வருவது அடிக்கடி நடக்கும் நிகழ் வாகி வருகிறது.
இந்நிலையில், நேற்று மாலை ஆலையில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானையொன்று சிறுமுகையில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையை கடந்து சாலை யோரம் வீசப்பட்டு கிடக்கும் குப்பைகளை கிளறி உண்ண ஏதேனும் கிடைக்குமா என தேடி விட்டு சற்று நேரத்தில் வந்த வழியே ஆலைக்குள் சென்று மறைந்து விட்டது.
திடீரென யானை நுழைவதையும் குப்பைகள் கொட்டிக்கிடக்கும் சாலை யோரம் நிற்பதையும் கண்ட அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். மூடப்பட்டு கிடக்கும் ஆலைக்குள் முகாமிட்டுள்ள இந்த யானைகளின் சாணங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடர்ந்த காட்டினுள் இருக்க வேண்டிய யானைகள் நகரப்பகுதியில் உள்ள ஆலையினுள் வளர்ந்துள்ள புதர்காட்டில் இருப்பது மக்களின் உயிருக்கு மட்டுமின்றி யானைகளின் உயிருக்கும் அச்சுறுத்தலாகும் என கூறும் இப்பகுதி மக்கள் இவற்றை அடர்ந்த காட்டினுள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.