இளைய தலைமுறையினரிடம் கைத்தறி பற்றிய விழிப்புணர்வை கொண்டு செல்ல அவினாசிலிங்கம் மனையியல் உயர் கல்வி நிறுவனத்துடன் இணைந்து கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் விழிப்புணர்வு முகாமை நடத்தியது.
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 88 ஆண்டுகளாக முகூர்த்தப்பட்டு உற்பத்தியில் பாரம்பரியமாக ஈடுபட்டு வருகிறது. கைத்தறித்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தபடி, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர் கல்வி நிறுவனத்தில் கைத்தறி பற்றிய விழிப்புணர்வு முகாமை நடத்தியது.
முகாமில் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு வகையான பட்டுப்புடவைகள், பருத்திப்புடவைகள், புவிசார் குறியீடு பெற்ற கைத்தறி ரகங்கள், ஹோம் டெக்ஸ்டைல்ஸ் ரகங்கள், நாகரீகப் பைகள், துப்பட்டாக்கள் போர்வைகள், தலையணை உறைகள் மற்றும் துண்டுகள் முதலிய துணி வகைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
கைத்தறித்துறை மற்றும் கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள் கைத்தறி ரகங்களின் சிறப்புகளைப் பற்றி எடுத்துக்கூறியதோடு மாணவர்களிடையே கைத்தறி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வினாடி வினா நிகழ்ச்சியையும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினர்.
கல்லூரி டீன் டாக்டர் எஸ்.அம்சமணி தலைமை தாங்கி பேசினார்.
கோ-ஆப்டெக்ஸ் பொது மேலாளர் ஆர்.வாசு கானொளி காட்சி மூலம் கலந்து கொண்டு கைத்தறியின் பாரம்பரியம் மற்றும் விழிப்புணர்வைப் பற்றி சிறப்புரை வழங்கினார்.
கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் த.நந்தகோபால் கைத்தறியின் சிறப்புக ளைப் பற்றியும், கோ-ஆப்டெக்ஸ்ஸின் பல்வேறு திட்டங்களையும் எடுத்து ரைத்தார். கைத்தறித்துறை மற்றும் கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள் ஆரோக்கியராஜ், மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை மேலாளர் ந.செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



