கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நேற்று (டிச.8) ‘வாழ்ந்து காட்டுவோம் திட்டம்’ சார்பில், மாவட்ட அளவி லான பணிக்குழு கூட்டம் நடந்தது.
‘வாழ்ந்து காட்டுவோம் திட்டம்’ என்பது உலக வங்கியின் உதவியுடனான ஒரு புதுமையான திட்டமாகும்.
இது கிராமப்புற சமூகங்களின் நிலைத்தன்மை மற்றும் செழிப்பை உருவாக்குவதன் மூலம் கிராமப்புற நிறுவன மேம்பாடு, நிதி மற்றும் வேலைவாய்ப்புக்கான மாற்றத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் காரமடை, பெரியநாயக்கன்பாளையம், அன்னூர், சர்க்கார் சாமக்குளம் ஆகிய நான்கு வட்டாரங்களின் கீழ் உள்ள 54 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இணை மானிய நிதி
இத்திட்டத்தின் கீழ் இணை மானிய நிதியின் மூலம் தொழில்களை மேம்படுத்துவதற்காகவும், புதிய தொழில்களை துவங்குவதற்கும் சர்க்கார் சாமக்குளம் வட்டாரத்தை சேர்ந்த 5 பயனாளிகளுக்கு 30 சதவீதம் (ரூ.4.5 லட்சம்) மானியத்துடன் கூடிய ரூ.15லட்சம் மதிப்பிலான வங்கி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார்.
திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் செல்வம், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் ஜெகதீசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.