கோவை அவினாசி ரோடு மிக முக்கியமான சாலையாகும். இந்த சாலையில் ஏராளமான கல்லூரிகள், ஓட்டல்கள், நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக காணப்படும்.
இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டே கடந்த பல வருடம் முன்பு ஆறுவழி சாலையாக மாற்றப்பட்டது. இருந்த போதும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.
இதையடுத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் போக்குவரத்து வசதிக்காகவும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது. 10.10 கி.மீ நீளத்தில் ரூ.1,621.30 கோடி மதிப்பில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது.
தற்போது பாலத்திற்கான தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோல்டுவின்சிலிருந்து விமான நிலையம் வரை தாங்கு தூண்களில் ஓடுதளம் அமைக்கும் பணி விரைந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மாநகராட்சி சுவர் விளம்பரங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சுவரொட்டிகள்
முதல் கட்டமாக காந்திபுரத்தில் உயர்மட்ட மேம்பால சுவரொட்டிகள் அகற்றப்பட்டு தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது.
இதன் அடுத்தபடியாக அவினாசி மேம்பால தூண்களிலும் சுவரொட்டிகள் அகற்றும் பணியை மாநகராட்சி தீவிரமாக செய்து வருகிறது. மேலும் வருகின்ற 18-ந் தேதி ஜனாதிபதி கோவை வர உள்ளார். இதனால் தூண்களில் தண்ணீரை பீச்சி அடித்து சுத்தம் செய்து வருகின்றனர்.
சாலையின் நடுவே உள்ள தடுப்புகள், அவினாசி மேம்பாலம் ரவுண்டானா ஆகிய இடங்களில் வண்ணம் பூசப்பட்டு கோவை புது பொலிவு அடைந்து வருகிறது.