fbpx
Homeபிற செய்திகள்பிகாரில் காங்கிரஸ் பெற்ற 2வது மோசமான தோல்வி

பிகாரில் காங்கிரஸ் பெற்ற 2வது மோசமான தோல்வி

பிகார் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை கைப்பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி பிரம்மாண்ட வெற்றியை பெற்றதோடு மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது.

இந்தக் கூட்டணியில் உள்ள பாஜக 89 இடங்களையும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 85 இடங்களையும் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) 19 இடங்களையும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 5 இடங்களையும் ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா 4 இடங்களையும் கைப்பற்றின.


மறுபுறம் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரசின் கூட்டணிக்கு இந்த தேர்தலில் பலத்த அடி விழுந்தது. இந்த கூட்டணியால் வெறுமனே 35 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. இதில், தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் 25 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு 2, ஐ.ஐ.பி. கட்சி 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 1 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.


பிகார் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தது. வாக்கு திருட்டு குறித்து ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு வைத்திருந்தார். லோக்சபா தேர்தல், ஹரியானா மாநில சட்டசபை தேர்தல்களில் வாக்கு திருட்டு நடந்ததாக தரவுகளும் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார். மேலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) கடுமையாக எதிர்த்தார்.


நடந்து முடிந்த தேர்தல் பிரசாரத்தின்போது, வாக்கு திருட்டு-க்கு எதிராக ராகுல்காந்தி தலைமையில் பிகாரில் வாக்காளர் உரிமை யாத்திரை நடத்தப்பட்டது. இவையெல்லாம் தேர்தலில் சாதகமான வாக்குப்பதிவைத் தரும் என காங்கிரஸ் கணக்கு போட்டது. ஆனால் இதெல்லாம் தேர்தலில் எடுபடாமல் போனது.

61 தொகுதிகளில் போட்டியிட்ட அந்த கட்சியால் வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. பல இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். முன்னதாக, காங்கிரஸ் வரலாற்றில் மிகவும் மோசமாக பிகார் தேர்தலில் கடந்த 2010ல் 4 இடங்களில் மட்டுமே வென்றது.

15 ஆண்டுகள் கழித்து 6 இடங்களை பிடித்து மீண்டும் மோசமான தோல்வியை தழுவி இருக்கிறது. பிகாரில் 1985 வரை 100க்கும் மேற்பட்ட இடங்களை வென்று ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ் அதிவேகமாக தனது பிடியை பிகாரில் இழந்துள்ளது.


இதனால் ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு குற்றச்சாட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு போன்றவை பிகார் மக்களிடம் எடுபடாமலேயே போயுள்ளது. அங்கு அவர் 15 நாள் யாத்திரை நடத்தினார். அந்த யாத்திரை நடந்த இடங்களில் கூட காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது.


தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கணிப்புகளில் கூட காங்கிரஸ் & ஆர்ஜேடி கூட்டணிக்கு குறைந்தது 100 தொகுதிகள் கிடைக்கும் என்றே கூறப்பட்டது. ஆனால் கிடைத்ததோ வெறும் 35 இடங்கள் மட்டுமே.

அதாவது பிகார் தேர்தல் வரலாற்றில் காங்கிரஸ் கட்சி தனது இரண்டாவது மோசமான செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. இந்த படுதோல்வியில் இருந்து காங்கிரஸ் எப்படி, எப்போது மீளப்போகிறது? என்பதே பெரிய கேள்விக்குறியாகி விட்டது!

படிக்க வேண்டும்

spot_img