பால் குளிரூட்டும் நிலையத்தில் உள்ள கம்பரசர் இயந்திரத்தின் இயக்கத்தினையும், பால் கூட்டுறவு சங்கங்களிலிருந்து கொண்டுவரப்படும் பாலின் தரத்தை பரிசோதனை செய்ய அமைக்கப்பட்டுள்ள, கணினி மயமாக்கப்பட்ட தானியங்கி பரிசோதனை இயந்திரம், பால் சேமிக்கப்படும் சேமிப்பு கலன், பால் குளிரூட்டும் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் உமா செய்தியாளர்களுடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, பரமத்தி நெடுஞ்சாலையில் உள்ள ஆவின் பாலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, விற்பனை செய்யப்படும் ஆவின் பொருட்கள், விற்பனை நிலவரம், தினசரி வருகை தரும் வாடிக்கையாளர்களின் விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை விற்பனையாளரிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் கூறுகையில்,
“நாமக்கல் மாவட்டத்தில் 480 சங்கங்கள் மூலமாக கிராமப்புறங்களில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து சராசரியாக நாளொன்றுக்கு 1,34,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு 38 பால் வழித்தடங்களில் வாயிலாக 2 பால்குளிரூட்டும் நிலையங்களான, நாமக்கல் லத்துவாடி பால்குளிரூட்டும் நிலையம் மூலம் 47 ஆயிரம் லிட்டர் பால் குளிரூட்டப்பட்டு, பரமத்தி வேலூர் பால்குளிரூட்டும் நிலையம் மூலம் 37 ஆயிரம் லிட்டர் பால் குளிரூட்டப்பட்டு மற்றும் 16 தொகுப்பு பாலகுளிர்விப்பான்களிலிருந்து 50 ஆயிரம் லிட்டர் பால்குளிரூட்டப்பட்டு விற்பனைக்கும், உபபொருட்கள் தயாரிப்பதற்கும் சேலம் ஒன்றியத்திற்கும், சென்னைக்கும் அனுப்பபடுகிறது.
பால் உற்பத்தியாளர்களுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை பால்பணம் வங்கி கணக்கு வாயிலாக சம்மந்தப்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் 282 பால் முகவர்கள், 58 பாலக முகவர்கள் மற்றும் 8 மொத்த விற்பனை முகவர்கள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 80 ஆயிரம் லிட்டர் பால் மற்றும் மாதம் ஒன்றுக்கு சராசரியாக ரூ.50 லட்சத்திற்கு பால் உபபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் நாமக்கல் பேருந்துநிலையம், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகம், குறுக்குபுரம் ஆவின் நவீன பாலகம் ஆகிய 3 இடங்களில் ஒன்றியத்தின் மூலம் இயக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
நாமக்கல் பால் குளிரூட்டும் மையம், பரமத்தி வேலூர் பால் குளிரூட்டும் மையம், ஆவின் நவீன பாலகம், குறுக்குபுரம் ஆகிய ஒன்றியத்தின் சொந்த இடங்களில் ஆவின் பாலகம் அமைக்கப்பட்டு பால் மற்றும் உபபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், நாமக்கல் மாவட்டத்தில் 55 இடங்களில் ஒன்றியத்தின் பாலக உரிமம் பெற்று செயல்பட்டு வருகின்றன” என்றார்.