திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தரமாக, உரிய காலக்கெடுவில் செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்யும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் செய்தியாளர் பயணத்தின் போது துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேரில் சென்று திட்டங்களை ஆய்வு செய்தார்.
வளர்ச்சி பணிகள் ஆய்வு விவரங்கள்:
வள்ளிவாகை ஊராட்சியில், 2024-25 நிதியாண்டின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.3.17 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நாற்றங்கால் பண்ணை தொழில்நுட்ப முறையில் செயல்படுகின்றதா என்பதை நேரில் பார்வையிட்டு, மரக்கன்றுகள் உற்பத்தி நிலவரம் குறித்து தகவல் பெற்றார்.
அதே ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.53.52 இலட்சம் மதிப்பீட்டில் வள்ளிநகர் முதல் வேடியப்பன் நகர் வரை அமைக்கப்படும் தார்சாலை பணிகள் பரிசோதனை கருவிகள் மூலமாக சோதிக்கப்பட்டு, பணியின் தரத்தையும் முன்னேற்றத்தையும் மதிப்பீடு செய்தார். விரைவில் பணி முடிக்கவேண்டும் என அறிவுறுத்தினார்.
பின்னர் சானாந்தல் ஊராட்சியில், ரூ.9.68 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படும் நாற்றங்கால் பண்ணையை ஆய்வு செய்து, இதில் எத்தனை நபர்கள் பணியாற்றுகிறார்கள், உற்பத்தி நிலை என்ன வென்று கேட்டறிந்து, மரக்கன்றுகளை நன்கு பராமரிக்கத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த செய்தியாளர் பயணத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இரா.மணி, செயற்பொறியாளர் இளங்கோ, துரிஞ்சாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், கோபு மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட நிர்வாகம், மாநில அரசு வழங்கும் திட்டங்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முழுமையுடன் செயல்படுத்தத் தொடர்ந்து நேரடி கண்காணிப்பு மற்றும் செய்தியாளர் பயணங்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.