தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னெடுப்பில் செயல்படுத்தப்படும் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் தண்டராம்பட்டு வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கீழ்சிறுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கான அடிப்படை வசதிகள், ஊட்டச்சத்து நிலை மற்றும் ஆர்.பி.எஸ்.கே. குழு மூலம் மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நுண்ணீர் பாசன முறையில் பயிரிடப்பட்ட கரும்புத் தோட்டத்தை பார்வையிட்டு, உர மேலாண்மை மற்றும் கரும்பு நடவு இயந்திர பயன்பாடு குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
இராதாபுரம் ஊராட் சியில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் குறுகிய காலப் பயிர் கடன், கால்நடை வளர்ப்பு கடன், நகைக்கடன், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடனுதவிகள் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.
நியாய விலை கடையில் அத்தியாவசிய பொருட்களின் தரம் மற்றும் இருப்பு நிலையும் பரிசோதிக்கப்பட்டது.
தண்டராம்பட்டு ஊராட்சியில் ரூ.6 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடப் பணிகளை பார்வையிட்டு, பணிகளை தரமாகவும் விரைவாகவும் நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், மகளிர் சுயஉதவி குழு கடனுதவி மூலம் தொடங்கப்பட்ட மளிகைக் கடையில் தயாரித்து விற்பனை செய்யப்படும் பினாயில், சோப்பு, எண்ணெய், ஊதுவத்தி, கற்பூரம் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் குறித்து கேட்டறிந்து, விற்பனை விரிவுபடுத்த ஆலோசனைகள் வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
சாத்தனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை வசதிகள், மருந்து இருப்பு மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன், குடிநீர், மதிய உணவு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) தனபதி, இணை இயக்குநர் (வேளாண்மை) கண்ணகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மலர்விழி, திருவண்ணாமலை கோட்ட உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வடிவேலன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் மாலதி, தண்ட ராம்பட்டு வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.



