பா ஜக ஆட்சிக்கு வந்த பிறகும் சரி, வருவதற்கு முன்பும் சரி பெண்களை மட்டம் தட்டி அக்கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு பண்பாடு, கலாச்சாரம் முக்கியம் என்றும், அவர்கள் குறிப்பிட்ட உடைகளைத் தான் அணிய வேண்டும் என்றும் பேசி வருகின்றனர்.
மேலும் பாஜகவை சேர்ந்த தலைவர் ஒருவர், பெண்கள் வேலைக்கு செல்வதால் தான் பாலியல் வன்கொடுமை நடக்கிறது என்றும், 6 மணிக்கு மேல் பெண்கள் வெளியில் சுற்றுவதால் தான் இதுபோன்ற தவறுகள் நிகழ்கிறது என்றும் கூறினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜக ஆதரவாளரான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அருவருக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்து பெரும் சர்ச்சையில் சிக்கினார். வலுத்த கண்டனங்கள் எழுந்த நிலையில் மன்னிப்பு கேட்டார்.
அதோடு உத்தர பிரதேசம், ஹத்ராஸ் பகுதியில் தலித் இளம்பெண் கடுமையாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ள விவகாரத்திலும் கூட பாஜகவினர் அந்த பெண்ணை பற்றி அவதூறு பரப்பினர். இப்படியாக பெண்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து சிக்கலில் சிக்கியுள்ளார், அசாம் மாநில பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா.
கவுஹாத்தி பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்று பேசியபோது, “பெண்களுக்காக நம் (அசாம்) மாநில அரசு அநேக திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. மேலும் பெண்களுக்கு எதிரான குழந்தை திருமணம், வன்கொடுமைகளுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எப்படி, சிறு வயதில் கருத்தரிப்பது ஆபத்தான விஷயமோ, அதேபோல வயது தாண்டி குழந்தை பெற்றுக்கொள்வதும் சரியான செயல் அல்ல. வயது முதிர்ந்து தாயானால் சிக்கல்களும் ஏற்படலாம். அனைத்து விஷயங்களையும் ஒரு குறிப்பிட்ட வயதில் செய்ய வேண்டிய விதத்தில் தான் கடவுள் நமது உடலை படைத்துள்ளார்.
எனவே, பெண்கள் தங்கள் 22 வயதில் இருந்து 30 வயதுக்கு உட்பட்ட காலகட்டத்தில் தாய்மை அடைய வேண்டும். இந்த வயதில் இருக்கும் பெண்கள் திருமணமாகாமல் இருந்தால் விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும்“ என்றார்.
பெண்கள் தாங்கள் சுயமாக சம்பாதித்த பிறகே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும், வீட்டிலுள்ள ஆண்களை நம்பி பெண்கள் இருக்க கூடாது என்றும், எனவே ஒரு பெண் வேலைக்கு செல்வது கட்டாயம் என்றும் பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், ஒரு மாநில முதல்வரே இப்படி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாஜக முதலமைச்சரின் இந்த கருத்துக்கு திருமணம் என்பது பெண்களின் தனிப்பட்ட உரிமை எனவும், இந்த வயதில் திருமணம் செய்ய வேண்டும், குழந்தை பெற வேண்டும் என்று பேசுவது முதல்வரின் வேலையல்ல என்றும் பல பெண்ணிய ஆர்வலர்கள் விமர்சித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பெண்கள் குறித்து சர்ச்சைப் பதிவுகளை வெளியிடும் பாஜகவினரின் பட்டியலில் இப்போது மாநில முதல்வர் ஒருவரும் இடம்பெற்று விட்டார்.
நேற்றைய தினம் பிரதமர் மோடி பேசும்போது கூட பெண்கள் குறித்து குறிப்பிட்டு இருக்கிறார். ஆயுதப்படைகளில் கூட பெண்கள் நுழையத் தொடங்கிவிட்டனர் என்று பெருமிதத்தை வெளிப் படுத்தினார். அப்படிப்பட்ட பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசக்கூடாது என்றும் மிகக்கவன முடன் பேச வேண்டும் என்றும் தன் கட்சியினருக்கு பாஜக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்!