போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டிருக்கும்போது காவலர்கள் அவ்வப்போது செல்போனில் எதையாவது பார்த்துக் கொண்டிருப்பது நம் கண்ணில் படுகிறது.
தொடர் பணியில் கொஞ்சம் ரிலாக்சாக இருக்கட்டுமே என்று நாம நினைத்து கடந்து போகிறோம். குழந்தைகளை செல்போனில் விளையாட அனுமதித்து விட்டால் அதற்குப் பழக்கப்பட்டு அவர்களின் கவனம் சிதறி, படிப்பில் நாட்டம் குறைகிறது.
முதலில் அனுமதித்து விட்டு பின்னர் அந்தப் பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்டெடுக்க பெற்றோர் எவ்வளவு சிரமப்பட வேண்டியதிருக்கிறது? இது பெரியவர்களுக்கும் விலக்கல்ல. எந்த ஒரு பழக்கத்திற்கும் அடிமையாகி விட்டால் அதில் இருந்து மீள்வது கடினமே.
நல்ல பழக்கமாக இருந்தால் ஓ.கே.
மது, கஞ்சா போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாகி எத்தனையோ குடும்பங்கள் சீரழிந்து சின்னாபின்னமாகிப் போவதையும் தற்கொலை, கொலை என்ற அளவிற்கு போவதையும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அதுபோன்ற ஒரு வகையைச் சார்ந்தது தான் செல்போனில் சமூக வலைதளங்களில் மூழ்கிப் போவதும். இதனால் பாதிப்பு குறைவாக இருந்தாலும் பாதிப்பு பாதிப்பு தானே. பிறரை எளிதில் தொடர்பு கொள்வதற்காகவும் இணையத்தில் நல்ல தேடலுக்காகவும் செல்போனை பயன்படுத்துவதில் தவறு இல்லை.
ஆனால் அடிக்கடி செல்போனில் மூழ்கி பழக்கத்துக்கு அடிமையானால் கவனம் சிதறி நமது அன்றாட வாழ்க்கைப்பணியில் தொய்வு ஏற்படும், முன்னேற்றத்தில் தடை ஏற்படும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அந்த வகையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக துறை ரீதியாக ஓர் உத்தரவை பிறப்பித்து இருக்கிறார்.
பாதுகாப்புப் பணி மற்றும் சாலைகளில் போக்குவரத்துப் பணியிலிருக்கும் காவலர்கள் பணிநேரத்தில் செல்போனை பயன்படுத்துவதால், அவர்களால் பணியை சரியாக செய்யமுடியாதபடி கவனச் சிதறல் ஏற்படுகிறது. இக்கவனச் சிதறலால், பல முக்கியப் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.
குறிப்பாக, சட்டம் – ஒழுங்கு. பாதுகாப்புப் பணி, முக்கியப் பிரமுகர்கள் பாதுகாப்புப் பணி. கோவில் மற்றும் திருவிழாக்கள் பாதுகாப்புப் பணிகளின்போது கண்டிப்பாக செல்போனை பயன்படுத்தக் கூடாது என்பதை பணியை நியமிக்கும்போதும், பணியைப் பற்றி விவரிக்கும்போதும் காவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என காவல் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மிக மிக முக்கிய நபர்களின் பாதுகாப்பு, முக்கியப் போராட்டங்கள் இவ்வாறான முக்கியப் பணிகளின்போது, காவல் உதவி ஆய்வாளர்களுக்கு கீழ் உள்ள ஆளிநர்கள் செல்போனை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தி இருக்கிறார்.
எனவே, அனைத்து கூடுதல் காவல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள் ஆகியோர் அவரவர்களின் கீழ் பணிபுரியும் காவலர்கள் இந்த அறிவுறுத்தல்களை எந்த வித சுணக்கமும் இன்றி மிக கண்டிப்புடன் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
அதே நேரத்தில் இது போன்ற உத்தரவுகள் அவ்வப்போது பிறப்பிக்கப்படுவதும், பின்னர் அது காற்றில் பறந்து போவதையும் கடந்த காலத்தில் பார்த்து இருக்கிறோம்.
அது போல நடந்து விடாமல் தொடர் நடவடிக்கைகள் மூலம் இந்த உத்தரவு கண்டிப்புடன் அமலாக்கப்பட வேண்டும் என்பதைத் தான் மக்கள் எதிர்பார்ப்பார்கள்; எதிர்பார்க்கிறார்கள்.
இந்த உத்தரவு தமிழகம முழுவதும் காவல்துறைத் தலைவரால் தீவிரமாக அமலாக்கம் செய்யப்பட வேண்டும். அனைத்து காவலர்களும் அதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.
பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை விதிக்கும் சென்னை மாநகர காவல் ஆணையரின் அதிரடி நடவடிக்கை பாராட்டத்தகுந்தது.
வரவேற்று வாழ்த்துவோம்!