மத்திய இடைநிலை கல்வி வாரியம், பிரிவு ஏ, பி, சி பணியிடங்கள் 118-க்கான நியமனத் தேர்வு அறிவிப்பை வெளியிட்டு அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறது. இதில் இந்தித் தேர்வையும் திணித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிபிஎஸ்இ ஏ பிரிவுக்கான நியமன தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 300 இல் இந்திக்கு 30 மதிப்பெண்கள். பி பிரிவுக்கான 300 இல் இந்திக்கு 15 மதிப்பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்தி மொழி பாடத்திற்கு 10 சதவீத மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டு விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மொழி சமத்துவத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட அலுவல் மொழி விதிகளுக்கு முரணான அறிவிப்பாகும்.
இதனால் இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்த தேர்வர்கள் குறைந்தபட்சம் 10 சதவீதம் பேர் முதற்கட்ட தேர்விலேயே தகுதி இழந்து, இரண்டாம் கட்ட தேர்வுக்கு அடியெடுத்து வைக்கும் வாய்ப்பையே பறி கொடுப்பார்கள் என்பது தான் வேதனையான விஷயம்.
இதனை எதிர்த்து தமிழகத்தில் இருந்து சு.வெங்கடேசன் எம்.பி. முதல் குரலை உயர்த்தி உள்ளார். இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்களுக்கு மீண்டும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
அதில் அநீதியை நிறுத்துமாறு கண்டிப்புடன் வலியுறுத்தி இருக்கிறார். இந்தியா என்பது பல மொழி பேசும் மாநிலங்களைக் கொண்ட நாடாகும். வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் அதன் வெற்றிக்கான தாரக மந்திரம்.
போட்டி என்றால் சமதள ஆடுகளம் இருக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலத் தேர்வர்களை போட்டியிலேயே பங்கேற்க விடாமல் தடுப்பது என்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அது ஜனநாயக முறையும் அல்ல.
எனவே, சிபிஎஸ்சி, தனது அறிவிப்பை ரத்து செய்து விட்டு தேர்வு முறையை உடனடியாக மாற்றி அறிவிக்க வேண்டும் என்பது தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களின் கோரிக்கை.
ஏற்குமா மத்திய அரசு?