fbpx
Homeதலையங்கம்பொங்கல் வைக்கவா? தேர்வு எழுதுவதா?

பொங்கல் வைக்கவா? தேர்வு எழுதுவதா?

ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று ஒன்றிய அரசின் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு கண்டனங்களும் கோரிக்கைகளும் வலுத்த பிறகே தேர்வு தேதியை மாற்றி வைக்கிறது. சில நேரங்களில் தேர்வு நடத்தப்பட்டு விடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதனை வாடிக்கையாக வைத்து வரும் ஒன்றிய அரசு, வழக்கம் போல இந்த ஆண்டும் இப்படியே அறிவித்துள்ளது.

இந்தியப் பட்டயக் கணக்காளர் கழகம், ஜனவரி மாதம் சிஏ இண்டர்மீடியட் மற்றும் இறுதித் தேர்வுகளை நடத்தத் திட்டமிட்டிருந்தது. இதில் ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டன.

ஆனால், இவை தமிழகத்தின் மிக முக்கியமான பண்டிகையான பொங்கல், திருவள்ளுவர் தினம் மற்றும் உழவர் திருநாள் ஆகிய தேதிகளில் வந்ததால் மாணவர்கள் மற்றும் தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்களிடம் இருந்து எதிர்ப்புகளும் அதிருப்தியும் எழுந்தன. இதையடுத்து பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு அந்த தேர்வு ஜன.19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எனினும் இதற்கான காரணமாக, “மகாராஷ்டிராவில் மாநகராட்சித் தேர்தல் நடப்ப தால் தேர்வு மாற்றப்படுகிறது” என்று விளக்கம் அளித்துள்ளது. எப்படியிருந்தாலும் தேர்வு தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது தமிழ் நாட்டு மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது முடிந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் பொங்கல் அன்று (ஜன, 15) அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனங்களும், தேர்வு தேதியை மாற்றி வைக்கக் கோரியும் கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், மற்றொரு அதிர்ச்சியையும் ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.

அதாவது தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று, தனது அனைத்து மண்டல மற்றும் பிராந்திய மேலாளர்களுக்கான வணிக ஆய்வுக் கூட்டத்தை வரும் ஜன.16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் லக்னோவில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்காக அதிகாரிகள் ஜனவரி 15-ஆம் தேதி மதியமே லக்னோ வந்தடைய வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இப்படியாக பொங்கல் அன்று பொங்கல் வைக்கவிடாமல், மாணவர்களுக்கு தேர்வும், அதிகாரிகளுக்கு கூட்டமும் வைக்க திட்டமிட்டு தமிழ்நாட்டு மக்களை மனதளவில் பாதிக்கப்பட வைக்கிறது.

மாணவர்கள் தேர்வு எழுதும்போது, சிலருக்கு பொங்கல் அன்று வீட்டில் இல்லையே என்ற ஏக்கமும் இருக்கும், அதிகாரிகளுக்கு, நல்ல நாள் அதுவுமா தங்கள் குடும்பத்தோடு இருக்க முடியவில்லையே என்ற வேதனை இருக்கும்; அவர்களின் குடும்பத்தாருக்கும் இருக்கும்.

ஒன்றிய பாஜக அரசின் இந்த செயலுக்கு தொடர்ந்து தமிழ்நாட்டு மக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். வேண்டுமென்றே இப்படி யெல்லாம் ஒன்றிய அரசு செய்கிறது என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தேசிய அளவில் போட்டித் தேர்வுகளை அறிவிக்கும் முன், ஒவ்வொரு மாநிலத்தின் பண்டிகைகள் பற்றி ஆய்ந்தறிய வேண்டும் என்ற அடிப்படை அறிவு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இல்லையா? அப்படியிருக்க வாய்ப்பில்லை & ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை நாளில் தேர்வை அறிவிப்பது நடந்து கொண்டுதானே இருக்கிறது.

அப்படியானால் தமிழக மாணவர்கள் அதிகளவில் பங்கேற்றுவிடக்கூடாது என்பதற்காக இப்படியெல்லாம் அறிவிக்கப்படுகிறதா? அல்லது அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண் டும் என்பதற்காகவா? என்ற சந்தேகம் எழுவது இயல்பு தானே.

எனவே, எந்தெந்த நாட்களில் தேர்வுகள் நடத்தக் கூடாது என்பதற்கான பட்டியலை உருவாக்கி, அதிலே பொங்கல் பண்டிகை நாளையும் இணைத்து அனைத்து துறைகளுக்கும் ஒன்றிய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கினாலொழிய இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காது!

படிக்க வேண்டும்

spot_img