fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.3072.61 கோடி கடனுதவி முதல்வர்...

திருப்பூர் மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.3072.61 கோடி கடனுதவி முதல்வர் ஸ்டாலினுக்கு பயனாளிகள் நன்றி

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.3072.61 கோடி மதிப்பீட்டில் ஊரக மற்றும் நகர்புறங்களிலுள்ள 55,436 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து ‘நிறைந்தது மனம்’ நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்தாவது:

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் தமிழகத்தில் முதன்முதலாக தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 1989 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், தனிநபர் வருமானம் பெருக்கும் நோக்கத்திலும், சுய உதவிக் குழுக்கள் உருவாக்கினார். இந்தக்குழு மூலம் ஊரக மற்றும் நகர்புற பகுதியிலுள்ள 10-20 பெண்களுடன் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு சுழல்நிதி கடன், பொருளாதார கடன், வங்கிக் கடன்கள் வழங்கப்படுகிறது. இது தமிழ்நாடு மாநில அரசு பெண்கள் மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தும் திட்டம் ஆகும். பெண்களை 12 முதல் 20 நபர் வரை கொண்ட குழுவாக அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் அமைத்து செயல்படுத்தப்படுகிறது.
அதனடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் ஊரகப்பகுதிகளில் கண்டறியப்பட்ட பெண்களை சுய உதவிக் குழுக்களாக அமைத்து, அடிப்படை பயிற்சிகள் வழங்கி, சுழல் நிதி மற்றும் கடன் இணைப்பு வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி நிலைத்த தன்மை அடையச் செய்து வறுமையிலிருந்து விடுவிப்பதே இவ்வியக்கத்தின் நோக்கமாகும்.

இப்பணிகள் அனைத்தும் இலக்கு ஆக மக்களைக் கொண்டு 265 கிராம ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட 265 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் 2021-22-ம் ஆண்டு 8676 சுயஉதவிக் குழுக்களுக்கு 516 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது, 2022-23-ம் ஆண்டு 13,684 சுயஉதவி குழுக்களுக்கு 766.45 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டில் 17,360 சுயஉதவி குழுக்களுக்கு 794.67 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. 2024-2025 ஆம்ஆண்டில் 13,167 சுயஉதவி குழுக்களுக்கு 800 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2025-2026 ஆம் ஆண்டில் தற்போது வரை 2,549 சுயஉதவி குழுக்களுக்கு 195.19 கோடி ரூபாய் கடனுதவி என மொத்தம் ரூ.3072.61 கோடி மதிப்பீட்டில் ஊரக மற்றும் நகர்புறங்களிலுள்ள 55,436 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்மனிஷ்நாரணவரே தெரிவித்துள்ளார்.
வைரம் மகளிர் சுயஉதவிக்குழுவைச் சேர்ந்த சபிதா தெரிவித்ததாவது:
நான் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எங்கள் பகுதியில் ஏழ்மை நிலையிலுள்ள 10 பெண்கள் சேர்ந்து ஒரு மகளிர் சுயஉதவிக்குழுவை அமைத்தோம். அதற்கு வைரம் மகளிர் சுய உதவிக்குழு என பெயரிட்டோம். இக்குழுவின் மூலம் சுயதொழில் தொடங்க வங்கிக்கடன் பெற அலுவலர்களிடம் விண்ணப்பித்தோம். எங்களுடைய விண்ணப்பத்தினை பரிசீலனை செய்த அலுவலர்கள் வங்கிக்கு கடன் தர பரிந்துரை செய்தார்கள்.
எங்களுக்கு வங்கிக் கடனாக ரூ.4.50 லட்சம் கடந்த மாதம் பெற்றோம். அதை மூலதனமாகக் கொண்டு அனைவரும் சுயதொழில் தொடங்கினோம். நான் சுயமாக சேலை வியாபாரம் செய்து வருகிறேன். இதன் மூலம் எனக்கு மாதம் ரூ.20,000 வருமானம் கிடைத்து வருகிறது. மாதத் தவணையாக ரூ.3,000 வங்கிக்கு செலுத்தி வருகிறேன். சுயதொழில் மூலம் பெறக் கூடிய வருமானத்தில் எங்கள் குழுவின் சார்பாக மாதம் ரூ.15,300-யை மாதத்தவனையாக வங்கியில் செலுத்தி வருகிறோம்.
தற்போது எங்களுக்கு கிடைக்கக் கூடிய வருமானத்தைக் கொண்டு பெற்ற கடனையும் சுலபமாக திருப்பி செலுத்த முடிகிறது. மேலும், மாதத்தவணை செலுத்தியது போக மீதமுள்ள தொகையில் எங்களுடைய பொருளாதாரம் மேம்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு யாருடைய தயவுமின்றி சமுதாயத்தில் தற்சார்பாக வாழ முடிகிறது. கடந்த காலங்களில் வெளிநபர்களிடம் கந்து வட்டிக்கு பணம் பெற்று செலுத்த முடியாமல் மீளா துயரத்தில் இருந்து வந்தேன். தற்போது சுய உதவிக்குழுக்கள் மூலம் கடன் கிடைப்பதால் எனது சுய தொழிலுக்கும் எனது வாழ்க்கையும் மன நிறைவுடன் உள்ளது.

எங்களைப் போன்ற ஏழ்மையான சமுதாயத்தை சேர்ந்த பெண்களுக்கு தங்களுடைய வாழ்க்கையில் பொருளாதாரத்தை மேம்படுத்த சுய தொழில் கடன் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அய்யா அவர்களுக்கு எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொகுப்பு:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
திருப்பூர் மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img