2 நாள் பயணமாக தமிழகம் வந்த அமித்ஷா, நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தென் சென்னை மாவட்ட தலைவர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுடன் கோவிலம்பாக்கத்தில் தனியார் மண்டபத்தில் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய அமித்ஷா, ‘வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 25 இடங்களில் வெற்றி பெற இலக்கு நிர்ணயிப்போம். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக ஜெயிக்க பாடுபடுங்கள்’, எனக் கூறியிருந்தார்.
அமித்ஷாவின் இந்த பேச்சு அதிமுகவில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய் திறந்து பதிலடி கொடுக்கவில்லை என்றாலும் செம்மலை, ஜெயக்குமார் ஆகியோர் திருவாய் மலர்ந்தருளி உள்ளனர்.
அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை இது குறித்து கூறிய போது, ‘தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுக தலைமையில் தான் கூட்டணி’ என்றும் ‘அதில் மாற்றுக் கருத்து இல்லை’ என்றும் தெரிவித்தார்.
மேலும் கட்சிகளின் செல்வாக்கைப் பொறுத்து ஒரு தொகுதியா? அல்லது 2 தொகுதியா? என்பதை அதிமுக தலைமை முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளின் தொகுதிகளை முடிவு செய்வது அதிமுக தான்.
எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் கடைபிடித்த வழிமுறையே பின்பற்றப்படும். பாஜகவினர் முதிர்ச்சியில்லாமல் இவ்வாறு செய்கின்றனர். பாஜகவினர் எந்தெந்த தொகுதி வேண்டும் என கேட்பது அவர்களது உரிமை.
ஆனால் அதுகுறித்து இறுதி முடிவு செய்யப்போவது அதிமுக தான். கட்சியை வளர்ப்பதற்காக பல இடங்களில் பாஜக கூட்டம் நடத்தலாம். அதில் தவறு இல்லை பாஜகவின் கை ஓங்கவில்லை.’ என்றார்.
அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக அதிக தொகுதிகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாகவும் குறைந்த பட்சம் 25 தொகுதிகளில் போட்டியிட திட்டமிடப்பட்டிருப்பதும் அமித்ஷா வாயிலாகவே வெளிப்பட்டு இருக்கிறது. அப்படியெல்லாம் தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம் என அதிமுகவும் உடனடியாக பதிலளித்து விட்டது.
ஆக, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கும் முன்பே தமிழ்நாட்டில் தனது தொகுதிக் கணக்கை அமித்ஷாவே ஆரம்பித்து வைத்து விட்டார். இந்த விஷயத்தில் அதிமுகவுக்கு இருந்து வந்த தலைவலியை, இப்போது திருகுவலியாக அமித்ஷா மாற்றி விட்டார்.
கடந்த முறை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசும்போது, ‘9 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டு பெறுவோம் என்றார். ஆனால் அமித்ஷாவோ 25 தொகுதிகள் என்கிறார்.
மொத்தம் தமிழகம், புதுவை சேர்த்து 40 தொகுதிகளில் 25 தொகுதிகளில் பாஜக போட்டி என்றால் மீதமுள்ள 15 தொகுதிகளில் போட்டியிட அதிமுக எப்படி ஒப்புக் கொள்ளும்?.
அந்த 15 தொகுதிகளில் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்தால் அதிமுகவுக்கு 10 தொகுதிகள் கூட தேராத நிலை இருக்கிறது. இல்லாவிட்டால் தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிடுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும், அமித்ஷா தென் சென்னை என குறிப்பிட்டு கூறியிருக்கிறார். இந்த தொகுதியில் அதிமுக, திமுக, காங்கிரஸ் என மாறி மாறி வென்றுள்ளது. அதிமுக 2 முறையும் திமுக மூன்று முறையும் வென்றுள்ளது.
எனவே இந்த தொகுதியை குறி வைத்து அமித்ஷா கேட்கும் போது அதிமுக விட்டுக் கொடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜகவுக்கு மட்டும் 25 தொகுதிகளை அதிமுக விட்டுக் கொடுக்குமா? அல்லது கூட்டணியை முறித்துக் கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!