அதானி குழும நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனம் மீது கடந்த அக்டோபர் 24ம் தேதி அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
கவுதம் அதானி, சாகர் அதானி, வினீத் எஸ் ஜெயின், ரஞ்சித் குப்தா, சிரில் கபெனிஸ், சவுரப் அகர்வால், தீபக் மல்ஹோத்ரா மற்றும் ரூபேஷ் அகர்வால் ஆகிய 8 பேர் மீது தொடரப்பட்ட இந்த வழக்கில் அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீடாகப் பெற்ற 250 மில்லியன் டாலர் பணத்தை (ரூ.2110 கோடி) இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கவுதம் அதானி மற்றும் சாகர் அதானி ஆகியோருக்கு நேற்று நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இது தான் தற்போது அமெரிக்காவிலும் இந்தியாவிலும் அதிர்ச்சி தரும் பேசுபொருளாக மாறி, விவாதிக்கப்பட்டு வருகிறது.
கவுதம் அதானியின் மிக நெருங்கிய நண்பர் பிரதமர் மோடி என்பதால் இந்த விவகாரம் கூடுதலாக கவனம் பெற்றுள்ளது.
கவுதம் அதானியை கைது செய்ய வேண்டும், நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். கவுதம் அதானியோடு செபி தலைவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் ஆவேசப்பட்டுள்ளார்.
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 22 வது இடத்திலும் இந்திய பணக்காரர் பட்டியலில் முதலிடத்திலும் இருக்கும் கவுதம் அதானி மீது இப்படியொரு குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு அதுவும் அமெரிக்க நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கும் அளவிற்கு வந்திருப்பது உலக அரங்கில் இந்தியர்கள் மீது படிந்த கரும்புள்ளியாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால், குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றம்சாட்டப்பட்டவர் நிரபராதி தான்
என்ற அமெரிக்கச் சட்டத்தை சுட்டிக்காட்டும் அதானி குழுமம், எங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு புனையப்பட்டுள்ளது
என்று அடியோடு மறுத்துள்ளது.
அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும் என பாஜக தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. இது அதானி மீது இந்தியாவிலும் சட்ட நடவடிக்கை தொடருமா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதால் அதானியை உடனடியாக கைது செய்துவிட முடியாது; எந்த நடவடிக்கையும் இந்திய அரசின் அனுமதியின்றி பாயாது. என்றாலும் தன் மீது படிந்த ஊழல் கறையைத் துடைத்தெறிய வேண்டுமானால் வழக்கை எதிர்கொள்வதைத் தவிர கவுதம் அதானிக்கு வேறு வழி என்ன இருக்கிறது?
ஆம்; இந்தியாவிலும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் தான், நிரபராதி என தன்னை நிரூபிக்க அதானிக்கு வாய்ப்பு கிடைக்கும். கவுதம் அதானியை மத்திய பாஜக அரசு காப்பாற்றவே முயற்சிக்கும் என்ற பரவலான பேச்சுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்.
ஏதோ ஒரு வழியில், உண்மை விரைவில் வெளிச்சத்திற்கும் வரட்டும்!