ஏராளமான இளம் வயது ரசிகர்களை பின்புலமாகக் கொண்ட நடிகர் விஜய் அரசியலுக்குள் நுழைந்திருக்கிறார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை அறிவித்ததோடு மட்டுமின்றி, ஒப்புக்கொண்ட படங்களை நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் நடிகர்கள் அரசியலுக்கு வரும்போதெல்லாம் சலசலப்புக்கு பஞ்சமே இருப்பதில்லை. அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நிகராக திரைத்துறையில் செல்வாக்கு பெற்றுள்ள நடிகர் விஜயின் வரவு, ரஜினியை போல் குழப்பத்துடன் அறிவிப்பதும் பின்வாங்குவதுமாக அல்லாமல் விஜயகாந்தின் உடனடி விஜயம் போல் அமைந்துள்ளது.
நடிகராக இருந்து அரசியலில் வெற்றிக்களம் அமைத்தவர் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது எம்ஜிஆரைத்தான். ஏனெனில் தன்னை எம்ஜிஆராக நினைத்துக் கொண்டு தனிக்கட்சி ஆரம்பித்து காணாமல் போன நடிகர்கள் ஏராளம்.. ஏராளம்..
அவர் நடிகராக இருந்தபடி திமுகவில் தன்னை தொண்டனாக இணைத்துக் கொண்டு கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம், திரைப்படங்களில் அந்தக் கட்சியின் கொள்கைகள், கொடி, சின்னத்தை பாமர மக்களிடம் கொண்டு சேர்ப்பதை முக்கிய கடமையாக வைத்திருந்தவர்.
தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் நான்கு முறை திமுகவின் நட்சத்திரமாக சட்டமன்ற தேர்தல்களின் போது பிரச்சார பீரங்கியாய் முழங்கியவர்.
முதலில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், அதன் பிறகு தேர்தல் களத்தில் இரண்டு முறை நின்று சட்டமன்ற உறுப்பினராகவும் வெற்றி பெற்றவர். எல்லாவற்றையும் விட திமுகவில் மூன்றாவது பெரிய பதவியான பொருளாளர் அளவுக்கு உயர்ந்தவர்.
இவ்வளவு பின்பலத்தோடு இருந்ததால்தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டபோது, ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியாக தனக்காக கட்சி ஆரம்பித்து இந்த உலகை விட்டு மறையும் வரை வெற்றிகளாக குவித்துவிட்டு போனார்.
அரசியலைப் பொறுத்தவரை வெற்றியை எட்டுவதற்கு ஒவ்வொருவரின் செல்வாக்கு மற்றும் அந்தந்த. காலச் சூழ்நிலை ஆகியவை இரண்டு அடிப்படை அம்சங்கள். இவை இரண்டும் ஒரே நேரத்தில் கை கொடுக்க வேண்டும். ஒன்று தாழ்ந்து போனாலும் சிக்கல்தான்.
பெரும்பாலானோர் சொல்வதைப்போல நிர்வாக சீர்கேடுகள், ஊழல் என்று ஆரம்பித்திருக்கிறார் விஜய். ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை வாக்கு அரசியல் என்று வந்துவிட்டால் சமூக நலத் திட்டங்கள், சமூக நீதி, மொழிக் கொள்கை போன்றவை பிரதானமாக பார்க்கப்படும். இந்த வளையத்திற்குள் நின்று தினம் தினம் ஆடுவதுதான் கடினமான காரியம்.
சமூக வலைத்தளங்கள் தலைவிரித்தாடும் இந்த காலகட்டத்தில், எல்லா விஷயங்களிலும் தெளிவான பார்வையை சொல்லாவிட்டால் சுற்றி நிற்கும் எதிர் தரப்பு துவம்சம் செய்து விடும்.
யாருடைய பின்னியக்கமும் இல்லாமல் தன்னை மட்டுமே நம்பி அரசியலில் சாதிக்க விரும்புபவருக்கு முதல் தேவை, தெளிவான அரசியல் சித்தாந்தம்.
இரண்டாவது தனது அரசியல் சித்தாந்தத்திற்கு எதிரான எதிரியை அடையாளம் கண்டு அரசியல் களமாடுவது. அப்புறம் களப்பணி விவகாரம். மக்கள் மத்தியில் ஏக புகழ் பெற்றிருந்தும் இந்தக் களப்பணி மற்றும் செலவை எதிர்கொள்ள முடியாமல் ஓடிப்போனவர்கள் நிறைய பேர், நடிகர் திலகம் சிவாஜி உள்பட.
மக்கள் மத்தியில் கிடைக்கும் புகழை அரசியலுக்கு மடை மாற்றி வெற்றி காண்பது என்பது மிக மிக கடினமான காரியம். ஆனால் முடியவே முடியாத காரியம் அல்ல.
நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் வெற்றிகரமாக அமையுமா அமையாதா என்பதைக் காண நீண்ட காலம் காத்திருக்க தேவையில்லை!