தொலை தூர ரயிலில்களில் தூங்கும் வசதி கொண்ட ஏ.சி பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு படுக்கை விரிப்புகள், கம்பளி ஆகியவை வழங்கப்படும்.
இரவில் தூங்கும்போது அவற்றை பயன்படுத்திய பின், பயணிகள் அவற்றை தங்கள் இருக்கையில் வைத்து விட்டு ரயிலில் இருந்து இறங்கிச் செல்வது வழக்கம்.
புரியிலிருந்து டெல்லிக்கு செல்லும் புருசோத்தம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏ.சி பெட்டியில் ஒரு பெண்ணும், 2 ஆண்களும் பயணம் செய்தனர். அவர்கள் டெல்லியில் இறங்கும்போது அந்த படுக்கை விரிப்புகளையும், கம்பளியையும், மடித்து தாங்கள் கொண்டு வந்த பைகளில் வைத்துள்ளனர்.
இதைப் பார்த்த ரயில் டிக்கெட் பரிசோதகர் மற்றும் உதவியாளர், அந்த பயணிகளிடம் படுக்கை விரிப்புகள் மற்றும் கம்பளியை இதுபோல் திருடுவது நியாயமா? என கேட்டுள்ளனர். அவற்றை திருப்பி கொடுங்கள், அல்லது ரூ.780 அபராதம் செலுத்துங்கள் என கூறியுள்ளனர்.
அப்போது அந்த பெண்ணின் மகன், தனது தாய் தவறுதலாக படுக்கை விரிப்பை மடித்து பையில் வைத்துவிட்டார் எனக் கூறி சமாளித்தார். அவர்களை டிக்கெட் பரிசோதகர் எச்சரித்து அனுப்பி விட்டார்.
இதுபோன்ற அற்பத்தனமான திருட்டைத் தடுக்க கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ரயிலில் படுக்கை விரிப்பைத் திருடும் இந்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாக பரவியது. இது டிஜிட்டல் உலகம். திருட்டில் பெரிய திருட்டு, சின்ன திருட்டு என்பதெல்லாம் கிடையாது. தண்டனை ஒன்று தான். எச்சரித்து அனுப்பாமல் போலீசில் புகார் செய்திருந்தால் சிறைக்கு கூட போயிருக்க நேர்ந்திருக்குமே.
வசதிப்படைத்தவர்களே இப்படி வாரிச்சுருட்ட முயற்சிக்கலாமா? ஏ.சி பெட்டியில் அதுவும் முதல் வகுப்பில் பயணம் செய்வது பெருமையான விஷயம். ஆனால், அதில் பயணம் செய்பவர்களும் இது போல் திருடுவது மிகவும் கீழ்த்தரமான செயல் அல்லவா?
பொது இடங்களில் கண்ணியமாக, நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்!



