நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனை கட்டிடம் ரூ.50 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட உள்ளது. இங்கு 24 மணி நேரமும் செயல்படும் மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 2 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று திலீப் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
நாமக்கல் மோகனூர் சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வந்தது. பின்னர், நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்துக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்டது.
இதனால், நாமக்கல் நகரின் மையப்பகுதியில் செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனை நகரில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு சென்றது. இதன் காரணமாக, அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர்.
எனவே, நாமக்கல் நகருக்குள் 24 மணி நேரமும் செயல்படும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, மோகனூர் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தை சீரமைத்து, மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமாக மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பராமரிப்பு பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட கலெக்டர் மதுபாலன் தலைமை தாங்கினார். நாமக்கல் எம்.எல்.ஏ. திலீப், மாநகராட்சி கமிஷனர் செல்வபாலாஜி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மற்றும் யுனைடெட் வெல்பேர் டிரஸ்ட் அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, திலீப் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:
நாமக்கல் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பழைய அரசு மருத்துவமனையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவமனை கட்டிடத்தை சீரமைத்து புதுப்பிக்கும் பணிகளுக்கு ரூ.50 லட்சம் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.யுனைடெட் வெல்பேர் டிரஸ்ட் அமைப்பின் பங்களிப்புடன் சீரமைத்து, புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
புதுப்பிக்கப்பட்ட மருத்துவமனை 2 மாதங்களில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இங்கு விபத்து, விஷம் அருந்துதல், நாய் கடி, பிரசவம் உள்ளிட்ட அவசர கால மருத்துவ சிகிச்சைகள் 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
மேலும், மருத்துவமனையில் 24 மணி நேரமும் டாக்டர்கள், செவிலியர்கள் பணியில் இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும். இதன் மூலம் நாமக்கல் நகர மக்களுக்கு அவசர காலங்களில் மருத்துவ சிகிச்சை பெறுவது எளிதாகும்.



