குழந்தைகள் கணிதக் கருத்துக்களை எண்கள் மற்றும் குறியீடுகள் மூலமாக மட்டுமில்லாமல், அசைவுகள்,தாளம்,சைகைகள் மற்றும் விளையாட்டு ஆகியவற்றின் மூலமாகவும் அனுபவப்பூர்வமாக உணர்ந்தால் எப்படி இருக்கும்? இத்தகைய ஒரு புதுமையான கற்றல் முறையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘மூவ் த்ரூ மேத்’ (Move Through Math)என்ற புதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது.

ஜெர்மனியைச் சேர்ந்த மெக்கானிக்கல் பொறியியலாளரும், பரதநாட்டிய கலைஞரும் மற்றும் ஆராய்ச்சியாளருமான டாக்டர் ஜனனி சுரேஷ் ராம், கடந்த சில ஆண்டுகளாக கணிதம், நடன அசைவு மற்றும் உடல்சார்ந்த கற்றல் ஆகிய வற்றின் சந்திப்பைப் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்து வருகிறார்.
அவருடைய இந்த நீண்டகால ஆராய்ச்சியின் பயனாக தற்போது ‘மூவ் த்ரூ மேத்’ என்ற புதிய கையேடு நூல் உருவாகியுள்ளது.இந்நூல் பரதநாட்டியத்தின் செழுமையான அசைவுக்கூறுகளை அடிப்படையாகக் கொண்டு, அசைவுகளால் ஈர்க்கப்பட்ட செயல்பாடுகள் மூலம் அடிப்படைக் கணிதக் கருத்துக்களை குழந்தைகளுக்கு மிக எளிமையாக அறிமுகப்படுத்துகிறது.

கல்வியாளர்கள், பெற்றோர், வழிகாட்டிகள் மற்றும் முக்கியமாக 5&-10 வயதுடைய குழந்தைகளுக்காக இந்த புத்தகம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒன்பது அத்தியாயங்களில் வடிவங்கள், உருவாக்குதல், எண் அறிவு, கணிதச் செயல்பாடுகள், அளவீடு, தரவு பகுப்பாய்வு மற்றும் இட-கால விழிப்புணர்வு உள்ளிட்ட 46 அடிப்படை கணிதக் கருத்துக்களை இந்த நூல் மிக விளக்கமாக எடுத்துரைக்கிறது.இந்தியா மற்றும் ஜெர்மனியில் நடத்தப்பட்ட பயிலரங்குகள், ஆராய்ச்சி மற்றும் உடல்சார்ந்த அசைவு மற்றும் கற்றலில் ஜனனியின் தொடர்ச்சியான பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

குழந்தைகள் கணித சிந்தனைகளுக்கான இயல்பான அடித்தளத்தை எவ்வாறு உருவாக்கலாம் என்பதற்கான ஒரு புதிய பார்வையை இப்புத்தகம் வழங்குவதாக அமைந்துள்ளது.
கோயம்புத்தூர் காஸ் மோபாலிடன் கிளப்பில் நடைபெற்ற விழாவில், பிரபல கலைஞர் மற்றும் சிந்தனையாளர் ராதே ஜக்கி, முழுமையான கல்வியின் முன்னோடியான டாக்டர் மணிமேகலை மோகன் ஆகியோர் இணைந்து இப்புத்தகத்தை வெளியிட்டனர்.முன்னதாக கலாமாமணி லாவண்யாசங்கர் வரவேற்புரை ஆற்றினார். அனாதி அறக்கட்டளையின் இணை நிறுவனரும் ஆராய்ச்சியாளருமான ஸ்மிருதி ரேகா ஆதிநாராயணன் வாழ்த்துரை வழங்கினார்.



