கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் வலது காலில் 10 நாட்களாக கடுமையான வலியால் பாதிக்கப்பட்ட நடுத்தர வயது ஆண் ஒருவர் சிகிச்சைக்காக வந்தார். பரிசோதனையில், இதயத்திலிருந்து நகர்ந்த ரத்தக்கட்டி காலின் முக்கிய இரத்தக் குழாயை முழுமையாக அடைத்திருந்தது கண்டறியப்பட்டது. உடனடி சிகிச்சை இல்லையெனில் காலை இழக்கும் அபாயம் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து ரோட்டாரெக்ஸ் ஆதரோத் ரோம்பெக்டமி முறையை பயன்படுத்தி, மருந்து இல்லாமல் ரத்தக் கட்டியை அகற்றும் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. சென்னை நகரத்திற்கு அடுத்து தமிழ்நாட்டில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட முதல் நிகழ்வு என மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் ரத்த அடைப்பு முழுமையாக நீக்கப்பட்டது. ரத்த ஓட்டம் உடனடியாக சீரானது. கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி கூறுகையில், “உலகத் தரத்திலான ரத்தக் குழாய் சிகிச்சைகளை கோவையிலேயே மக்களுக்கு கிடைக்கச் செய்வதே எங்கள் நோக்கம்” என்றார். இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி துறையின் டாக்டர் மேத்யூ செரியன், டாக்டர் பங்கஜ் மேத்தா, டாக்டர் சந்தோஷ் ஆகியோரை அவர் பாராட்டினார்.
செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி கூறுகையில், “கடுமையான இரத்தக் குழாய் பாதிப்புக்குப் பிறகு 24 மணி நேரத்திற்குள் நோயாளி மீண்டும் நடப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.



