fbpx
Homeபிற செய்திகள்கோவையில் அரசு பொருட்காட்சி துவங்கியது: ரூ.3.92 கோடி நலஉதவி வழங்கிய அமைச்சர்கள்

கோவையில் அரசு பொருட்காட்சி துவங்கியது: ரூ.3.92 கோடி நலஉதவி வழங்கிய அமைச்சர்கள்

கோவை வ.உ.சி. மைதானத் தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்ட அரசுப் பொருட்காட்சியை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத் குமார் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

அமைச்சர்கள் கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டு, பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் 459 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 92 லட்சத்து 95 ஆயிரத்து 860 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். விழாவில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, கூடுதல் ஆட்சியர் சங்கித் பல்வந்த் வாகே, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:

தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகள், செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் அரசுப் பொருட்காட்சிகள் நடத்தப்படுகின்றன. கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இக்கண்காட்சி தொடர்ந்து நடைபெறுகிறது. மற்ற 4 மாவட்டங்களில் சுழற்சி முறையில் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு கோவையில் நடைபெறும் கண்காட்சியில் 26 அரசுத் துறைகளும், கோவை மாநகராட்சி, ஆவின், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட 6 அரசு சார்பு நிறுவனங்களும் இணைந்து மொத்தம் 32 அரங்குகளை அமைத்துள்ளன. பொதுமக்கள் அரசின் நலத்திட்டங்களை நேரடியாக அறிந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு பேசினார்.

நலத்திட்ட உதவிகள்


விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பித்தளை இஸ்திரிப் பெட்டிகள், இ&-பட்டாக்கள், தாட்கோ உதவிகள் வழங்கப்பட்டன. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகள், மகளிர் மேம்பாட்டுக் கழகம் சார்பில் வங்கிக் கடன் அனுமதி ஆணைகள், கோவை மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் நுண்பாசனத் தொகுப்புகள், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மின்சக்கர நாற்காலி மற்றும் செயற்கை உறுப்புகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட பிணைப்பத்திரங்கள், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உலமாக்களுக்கு இருசக்கர வாகன உதவித்தொகையும் வழங்கப்பட்டது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத் குமார் பேசியதாவது:

இந்த அரசுப் பொருட்காட்சி அரசின் சேவைகளை மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்கும் முக்கிய நிகழ்வாகும்.
கண்காட்சி இன்று முதல் 45 நாட்கள் நடைபெறும். தினமும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை, விடுமுறை நாட்களில் மாலை 3 மணி முதல் திறந்திருக்கும். பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு பேசினார்.
முன்னதாக, கோயமுத்தூர் மாநகராட்சி அமைத்திருந்த பொதுமக்கள் சேவை மையத்தில் பிறப்புச் சான்றிதழ், சொத்து வரி, பெயர் மாற்றம் மற்றும் கட்டிட அனுமதி ஆணைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img