கோவையில் உள்ள அம்ருத வித்யாலயம் காளப்பட்டி மற்றும் அம்ருத வித்யாலயம் நல்லாம்பாளையம் பள்ளிகள், அம்மா ஸ்ரீ மாதா அம்ருதானந்தமயி தேவியால் வழிநடத்தப்படும் இளைஞர் இயக்கமான அயுத் (AYUDH) ஒருங்கிணைத்த தேனீக்களுக்கான தாவரங்கள் நடும் இயக்கம் மூலம் உலக சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடின.
அம்ருத வித்யாலயம் காளப் பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியை பி.ராதிகா தொடங்கி வைத்தார். இதில் சரோஜா ராஜலிங்கம், (முதல்வர், அம்ருதா வித்யாலயம், காளப்பட்டி) கலந்து கொண்டார்.
அம்ருத வித்யாலயம் நல்லாம்பா ளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை ஆர்.திருக்குமரன், (தன்ஷிகா ஆர்கானிக்ஸ்) தொடங்கி வைத்தார். இதில் எல்.மங்கையர்க்கரசி (முதல்வர், அம்ருத வித்யாலயம், நல்லாம் பாளையம்) ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள், அயுத் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் இரு பள்ளிகளிலும் உற்சாகமாக பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சிகளில் பேசுகையில், “இயற்கை பாதுகாப்பும் பல்லுயிர் பெருக்கமும் எதிர்கால தலைமுறைகளின் நலனுக்குத் தேவையானவை. மாணவர்கள் நேரடியாக சுற்றுச்சூழல் சார்ந்த நடவடிக்கைகளில் பங்கேற்பது, இயற்கை மீதான அக்கறையையும் பொறுப்புணர்வையும் வளர்க்கிறது” என்று வலியுறுத்தப்பட்டது.
காளப்பட்டி வளாகத்தில் தேனீக்கள் மற்றும் பிற மகரந்தச் சேர்க்கை உயிரினங்களுக்கு ஆதரவான 15 தாவரக் கன்றுகள் நடப்பட்டன. இந்த நடவடிக்கை சுமார் 5 சதுர மீட்டர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டது. 178 பேர் இதில் பங்கேற்றனர்.
நல்லாம்பாளையத்தில், சொர்கம், மகிழம், அத்தி, மரக்கொன்றை, புங்கன் மரம், எவர்கிரீன் மற்றும் இந்தியன் கோரல் ட்ரீ உள்ளிட்ட 10 உள்நாட்டு மரக்கன்றுகள் அடையாளம் காணப்பட்டு, பல்லுயிர் பெருக்கம் மற்றும் மகரந்தச் சேர்க்கை உயிரினங்களுக்கு உகந்த சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. 950 மாணவர்கள் இந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்றனர். மொத்தமாக 1,128 மாணவர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் இந்த இரண்டு பள்ளிகளிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இணைந்து பங்கேற்றனர். இந்த முயற்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலையான வாழ்க்கை முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
தேனீக்கள் மற்றும் பிற மகரந்தச் சேர்க்கை உயிரினங்கள் சுற்றுச்சூழல் சமநிலையையும் உணவுப் பாதுகாப்பையும் பேணுவதில் வகிக்கும் முக்கிய பங்கை மாணவர்கள் புரிந்துகொள்ளவும், இயற்கையைப் பாதுகாக்கும் பொறுப்புள்ள குடிமக்களாக உருவாகவும் இந்த முன்முயற்சி ஊக்கமளித்தது.



