சுவாமி சகஜானந்தா பிறந்த நாளை கொண்டாடும் வகையில், சிதம்பரம்- சீர்காழி சாலையில் சுவாமி சகஜானந்தா மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு அரசின் சார்பில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், திருமாவளவன் எம்பி, கடலூர் மாநகராட்சிதுணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சிதம்பரத்தில் நந்தனார் பள்ளிகளை துவக்கி, ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அறிவுக்கண்ணை திறந்த சுவாமி சகஜானந்தாவின் சமூக தொண்டை போற்றும் வகையில்,அவரின் பிறந்த நாளை அரசு விழா வாக கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டதற்கு இணங்க, சிதம்பரம் நான் முனிசிபல் பகுதியில் உள்ள சுவாமி சகஜானந் தாவுக்கு மணிமண்டபம் ரூ. 1.41 கோடி திட்ட மதிப்பில் 2.5 ஏக்கர் பரப்பளவில் வெண்கல சிலையுடன் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இதையடுத்து ஆண்டுதோறும் சுவாமி சகஜானந்தா பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் மணி மண்டப வளாகத்தில் ரூ.24.75 லட்சம் மதிப்பில் நூலக கட்டிடமும், ரூ.23.50 லட்சம் மதிப்பில் பயிற்சி மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் மணிமண்டபத்திற்கு கட்டப்பட்ட தோரணவாயில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜ பூபதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கமலம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



