கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், நெய்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமை நேரில் பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்ச ரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் மூலம் அனைத்து வகையான உடல் பரிசோதனைகளும், 17 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும், முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
“நலம் காக்கும் ஸ்டாலின்” பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு மருத்துவம், பேறுகால மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இதயநல மருத்துவம், நரம்பியல் சிறப்பு மருத்துவம், நுரையீரல் சிறப்பு மருத்துவம், நீரிழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவம், தோல் சிறப்பு மருத்துவம், பல் மருத்துவம், கண் சிறப்பு மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், சித்த மருத்துவம், உணவியல் மருத்துவம், ஆகிய 17 சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் சிறப்பு மருத்துவ நிபுணர்களால் வழங்கப்பட உள்ளது.
இம்முகாமில் அனைத்து சிகிச்சைகளும் பரிசோதனைகளும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படுகிறது.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், நீரிழிவு நோய் மற்றும் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதய நோயாளிகள், படுக்கையுற்ற நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை இலக்காகக் கொண்டு இம்முகாம்கள் நடைபெற்று வருகிறது.
கரூர் மாவட்டத்தில் கடந்த 02.08.2025 முதல் 10.01.2026 வரை நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம்களின் மூலம் 12,182 ஆண்கள், 20,364 பெண்கள் உள்ளிட்ட மொத்தம் 32,688 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதென மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, காசநோயால் பாதிக்கப்பட்ட 4 நபர்களுக்கும், 10 கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஊட்டச்சத்து பெட்டகங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 4 நபர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளையும், தொழிலாளர் நலத்துறையின் சார்பாக 13 நபர்களுக்கு தொழிலாளர் நலவாரிய அட்டைகளையும் மற்றும் அழகுராஜாவை பாராட்டி நிக்ஷய் மித்ரா சான்றிதழையும் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார்.
இம்முகாமில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு. சுப்பிரமணியன், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



