கோவையின் கல்வி மற்றும் தொழில்வளர்ச்சிக்கு வித்திட்டுள்ள பிஎஸ்ஜி &சன்ஸ் அறக்கட்டளை, தனது 100-வது நிறுவன தினவிழாவை நீலாம்பூர் பிஎஸ்ஜி ஐடெக் வளாகத்தில் உள்ள பிஎஸ்ஜி கன்வென்ஷன் சென்டரில் மிகச்சிறப்பாகக் கொண்டாடியது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றிய டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத் தின் தலைவர் எஸ்.பத்மநாபன், ஒரு நிறுவனம் நூறு ஆண்டுகளை நிறைவு செய்வது என்பது ஒரு மகத்தான மைல்கல் என்று குறிப்பிட்டார்.

சர்வஜன பள்ளியில் தொடங்கி இன்று 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களாகப் பிஎஸ்ஜி வளர்ந்திருப்பதைப் பாராட்டிய அவர், சர்வஜன என்பது ‘அனைவருக்குமான பள்ளி’ என்ற நோக்கில் சமூக நீதியை நிலைநாட்டியதாகத் தெரிவித்தார்.
வேடப்பட்டி போன்ற பகுதிகளில் விவசாய சமூகத்திற் காகச் செய்யப்பட்ட ஆரம்ப கால சுகாதார மற்றும் கல்விப் பணிகளையும் அவர் நினைவு கூர்ந்தார்.
மேலும், “நானும் பிஎஸ்ஜியில் பயின்ற மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன்; இங்கு நான் கற்ற அனுபவங்கள் என் வாழ்வில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன,” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தனது தலைமையுரையில், இந்த நூற்றாண்டு விழா என்பது ஒரு நெடிய பயணத்தைத் திரும்பிப் பார்ப்பதோடு, சமூகத்திற்கான புதிய பொறுப்புகளை ஏற்கும் தருணம் என்றும் குறிப்பிட்டார்.
முதல் தலைமுறை மாணவர்கள் உட்பட பல தலைமுறை கற்றல் சமூகத்தை இந்த அறக்கட்டளை உருவாக்கியுள்ளது என்றார். கல்வி மட்டுமின்றி, பிஎஸ்ஜி மருத்துவமனைகள் மற்றும் புற்றுநோய் சிகிச்சை மையம் மூலம் சமூகத்திற்கு ஆற்றிவரும் சேவைகளையும் அவர் பட்டியலிட்டார்.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தில், 2026-27 கல்வியாண்டில் இரண்டு புதிய கல்வி முன்னெடுப்புகளை எல். கோபாலகிருஷ்ணன் அறிவித்தார்.
அவை: 1. பிஎஸ்ஜி லீப் அகாடமி (PSG Leap Academy), 2. பிஎஸ்ஜி வேர்ல்டு ஸ்கூல் (PSG World School). நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, சமூகத்தின் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த நான்கு ஆளுமைகளுக்கு உயரிய விருதுகள் வழங்கப்பட்டன.
அதன் விவரம்: பிஎஸ்ஜி விஸ்வ சேவாரத்னா: டாக்டர்ஆர். வி. ரமணி (சங்கரா கண்மருத்துவமனைநிறுவனர்) மற்றும் டாக்டர் கே.இராதா கிருஷ்ணன், ஐ.பி.எஸ். (தமிழக முன்னாள் டி.ஜி.பி). பிஎஸ்ஜி விஸ்வ ஞானரத்னா: நவகந்தபட் (ஆராய்ச்சியாளர்) மற்றும் சுதா ரகுநாதன் (கர்நாடக இசைப்பாடகி).
1926-ஆம் ஆண்டு பி.எஸ். கோவிந்தசாமி நாயுடுவின் புதல்வர்களான பி.எஸ்.ஜி. வெங்கடசாமி நாயுடு, பி.எஸ்.ஜி.ரங்கசாமி நாயுடு, பி.எஸ்.ஜி.கங்கா நாயுடு மற்றும் பி.எஸ்.ஜி. நாராயணசாமி நாயுடு ஆகிய நால்வர் இணைந்து இந்த அறக்கட்டளையை உருவாக்கினர்.
தற்போது 30 கல்வி நிறுவனங்கள் மற்றும் அதிநவீன மருத்துவமனைகள் மூலம் 36,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கல்வி அளிப்பதோடு, உயர்தர மருத்துவச்சேவைகளையும் வழங்கி வருகிறது.



