இந்திய சர்வதேச ஜவுளி இயந்திர கண்காட்சி சங்கம் ‘‘ஜவுளித் துறையின் எதிர்காலத்தை உருவாக்குதல், பாரம்பரியத்திலிருந்து உயர் தொழில்நுட்பம் வரை” என்ற தலைப்பில் சிங்கப்பூரில் சமீபத்தில் ஜவுளி அமைச்சக அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், தொழில்முனைவோர், தொழில் நுட்ப வல்லுனர்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் பங்கேற்ற ‘வணிக மாலை’ நிகழ்ச்சியை நடத்தியது.
இந்திய வணிக மாலை நிகழ்ச்சியில் இந்திய ஐடிஎம்இ சங்கத்தின் கவுரவ பொருளாளர் செந்தில் குமார், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பாலியஸ்டர் பிரிவு தலைவர் ஹேமந்த் சர்மா, இந்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ரோஹித் கன்சால், சிங்கப்பூருக்கான இந்திய உயர் ஆணையர் டாக்டர் ஷில்பக் அம்புலே, பிரிட்டிஷ் ஜவுளி எந்திர சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேசன் கென்ட், இந்திய ஐடிஎம்இ சங்கத்தின் தலைவர் கேதன் சங்க்வி, இந்திய ஐடிஎம்இ சங்கத்தின் நிர்வாக இயக்குனர் சீமா ஸ்ரீவாஸ்தவா ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் சமீபத்தில் முடிவடைந்த தீபாவளி கொண்டாட்டங்கள் குறித்தும், ஜவுளி, ஜவுளி தொழில் நுட்பம் மற்றும் இயந்திரங்களுக்கான புதிய ஆதாரங்கள் மற்றும் வர்த்தக கூட்டணிகளை ஆராய்தல் என பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த மாலைப் பொழுதில் விவாதிக்கப்பட்டது.
இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, சுவீடன், இந்தோனேசியா, பங்களாதேஷ், இலங்கை, தைவான், துருக்கி, ஜெர்மனி மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 183க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் ஜவுளி அமைச்சக கூடுதல் செயலாளர் ரோஹித் கன்சால் கூறுகையில், “நெசவு மற்றும் பின்னல் இயந்திரங்களை நிறுவுவதில் இந்தியா உலகின் சிறந்த மையங்களில் ஒன்றாக விளங்குகிறது” என்றார்.
இதில் இந்திய ஜவுளி மற்றும் ஜவுளி பொறியியல் துறை பிரதிநிதிகள் குழு, பிரிட்டிஷ் ஜவுளி எந்திர சங்கம், தைவான் எந்திர தொழில் சங்கம், சர்வதேச ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகளும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்.
சிங்கப்பூருக்கான இந்திய உயர் அதிகாரி ஷில்பக் அம்புலே கூறுகை யில், “சிங்கப்பூர் இந்தியாவின் 6வது பெரிய வர்த்தக கூட்டாளியாகவும், ஆசியாவில் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாகவும் உள்ளது. ஜவுளித் துறையில் இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான உறவுகள் வலுவாக உள்ளது” என்று தெரிவித்தார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பாலியஸ்டர் பிரிவு தலைவர் ஹேமந்த் சர்மா பேசுகையில், “இந்தியாவின் ஜவுளித் தொழில் நாட்டின் உற்பத்தி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது 2047-ம் ஆண்டுக்குள் 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கும்“ என்றார்.
இந்திய சர்வதேச ஜவுளி இயந்திர கண்காட்சி சங்கத்தின் தலைவர் சங்வி பேசுகையில், “இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது மக்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் 25 சதவீதம் கூடுதலாக அதாவது 47.22 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிட்டுள்ளனர். ஜவுளி மற்றும் ஜவுளி பொறியியல் துறையானது அனைவருக்கும் வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் சிறப்பான எதிர்காலத்தை உள்ளடக்கி உள்ளது” என்றார்.



