கரூரில் இந்திய தொழிற்கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர் சங்கம், அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் கரூரின் வர்த்தக இலக்கு ரூ.50 ஆயிரம் கோடியை அடையும் வகையில் சிஐஐ-ன் 2030 விஷன் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று கரூரில் மாரத்தான் போட்டி மற்றும் அதிவேக நடை போட்டி நடைபெற்றது.
கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியை முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.
மேலும், 3 கிலோ மீட்டர் அதிவேக நடைப் போட்டியில் செந்தில்பாலாஜியும் கலந்து கொண்டு நடந்தார்.

இந்த போட்டியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.
போட்டியில் பங்கேற்ற மாணக்கர்களுக்கு குடிநீர் உள்ள அடிப்படை வசதிகளையும் பாதுகாப்பு வசதிகளையும் போட்டிகளை நடத்திய இந்திய தொழில் கூட்டமைப்பு சிஐஐ ஏற்பாடு செய்திருந்தது.
இந்த போட்டியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வீரர்களுக்கு ரொக்க பரிசு, பதக்கம், சான்றிதழும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.



