அந்தியூரை அடுத்த பர்கூர் மலைக் கிராமமான கத்திரிமலைக்கு ரூ.3.32 கோடியில் கம்பிகள் மூலம் மின்சாரம் வழங்கும் திட்டப்பணிகள் தொடங்கிவைக்கப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து 1097.28 மீட்டர் உயரத்தில் உள்ள இக்கிராமம் நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளுக்குப் பின்னர் மின்சார வசதி பெறுகிறது.
அந்தியூர் வட்டத்துக்கு உள்பட்ட பர்கூர் மலைப் பகுதியில் கத்திரிமலை கிராமம் உள்ளது. சென்னம் பட்டி வன எல்லைக்குள் உள்ள இக்கிராமத்தில் 76 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தரையிலிருந்து செங்குத்தான வழித்தடத்தை கொண்டுள்ள இக்கிரா மத்தில் 30 மாணவர்கள் படிக்கும் நடுநிலைப் பள்ளி உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1,097.28 மீட்டர் உயரத்தில் உள்ள இக்கிராமத்தில் சோலார் மின்சாரம் மூலம் இரவில் வெளிச்சம் கிடைத்து வந்தது.
மலை மக்கள் வசிக்கும் இக்கிராமத்துக்கு கம்பி வழியாக மின்சாரம் கொண்டுச் செல்லத் தேவையான முயற்சிகளை அந்தியூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.ஜி.வெங் கடாசலம் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். இதன் தொடர்ச்சியாக, ஈரோட்டில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கத்தரிமலைக்கு மின்சாரம் விஸ்தரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.
இத்திட்டத்துக்கு ரூ.3.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தரையிலிருந்து 8.34 கிலோ மீட்டர் தொலைவுக்கு உயர் அழுத்த மின்பாதையில் 271 மின் கம்பங்கள், புதைவட கம்பி மூலமாக மின்சாரம் கொண்டுச் செல்லப்படுகிறது. கத்திரி மலையில் 100 கிலோ வாட் மின்மாற்றி அமைத்து, 76 வீடுகளுக்கு மின் இணைப்பு மற்றும் தெருவிளக்குகளுக்கு இணைப்பு வழங்கப்படும். இந்த மின்பாதை மேட்டூர் சத்யா நகர் துணை மின் நிலையத்தில் உள்ள காவேரிபுரம் மின்பாதை வழியாக மின்சாரம் கொண்டு வரப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தின் கிழக்கு மற்றும் மேற்கு நுழைவாயிலின் நடுப் பகுதியில் அமைந்துள்ள இக்கிராமத்துக்கு முதன்முறையாக கம்பி வழியாக மின்சாரம் வழங்கப்படுகிறது.
மலையடிவாரமான சேலம் மாவட்டம், கொளத்தூர், கத்திரிப்பட்டி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, மின் விஸ்தரிப்பு பணிகளைத் தொடங்கிவைத்தார்.
இரு மாதங்களில் இப்பணிகள் நிறைவடைந்து, மின்சாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஏ.ஜி.வெங்கடாசலம் (அந்தியூர்), வி.சி.சந்திர குமார் (ஈரோடு கிழக்கு), பங்கேற்றனர்.



