காவேரி மருத்துவமனை, நடமாடும் நுரையீரல் மருத்துவமனை எனும் புதுமையான முயற்சியைப் பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது. இது நீண்டகால நுரையீரல் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுப்பதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது. ரோட்ராக்ட் கிளப் ஆஃப் மெட்ராஸ் நார்த் மற்றும் பே ஃபோர்ஜ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் முழுவதும் பயணித்து, மேம்பட்ட நுரையீரல் பரிசோதனை வசதிகளை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வரும்.
அடுத்த சில வாரங்களில், போரூர், பூந்தமல்லி, பெரம்பூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 20 சுற்றுவட்டாரப் பகுதிகளை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி செப்டம்பர் இறுதிக்குள் 35,000க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து வடபழனி காவேரி மருத்துவமனையின் முதுநிலை ஆலோசகர் நுரையீரல் நிபுணர் டாக்டர் செல்வி கூறுகையில்,“ஆஸ்துமா, சிஓபிடி மற்றும் நுரையீரல் நோய் போன்ற சுவாச பிரச்சனைகள் பெரும்பாலானவை கண்டறியப்படாமலேயே இருக்கின்றன. அவை பெரும்பாலும் தீவிரமாக ஆன பின்பே கண்டறியப்படுகின்றன. ஆரம்பத்திலேயே கண்டறிதல் பல உயிர்களை காப்பாற்றுகிறது” என்றார்.
காவேரி குழும மருத்துவமனைகளின் இணை நிறுவனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “காவேரி மருத்துவமனையைப் பொறுத்தவரை தரமான மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்” என்று கூறினார்.
இந்த துவக்க விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் தம்பி ராமையா, வடபழனி காவேரி மருத்துவமனை இதுபோன்ற பாராட்டக்கூடிய சிந்தனைக்கு முன்னெடுப்பு எடுப்பதை கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.



