கைத்தறி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ-மாணவிகள் கைத்தறி ஆடைகள் அணிந்து விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.
நெசவாளர்களை கவுரவித்து, கைத்தறி தொழிலை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் கைத்தறி தொழில் மற்றும் ஆடைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கோவையில் கல்லூரி மாணவ -மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
கோவை அரசு கலைக்கல்லூரி, பிஷப் அப்பாசாமி கல்லூரி உட்பட பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகள், கைத்தறி ஆடைகள் அணிந்த படி பேரணி மேற்கொண்டனர்.
ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கைத்தறி ஆடைகளையும் ஸ்டைலாக அணியலாம், நெசவாளர்களை காக்கலாம் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியவாறு மாணவர்கள் பேரணி மேற்கொண்டனர்.
மேலும், ரேஸ்கோர்சில் வைக்கப்பட்ட மாதிரி தறி இயந்திரத்தைப் பார்த்து, நெசவு முறை குறித்தும் தெரிந்து கொண்டனர்.



