தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் சுரேஷ், விசைத்தறித் தொழிலை பாதுகாக்க மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்ரீ கிரிராஜ் சிங்கிடம் மனு அளித்தார்.
அவரது மனு விபரம்: தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக, 6 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் வாயிலாக 20 லட்சத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
தற்பொழுது அதிநவீன தானியங்கி தறிகள் (ஏர்ஜெட், ரேப்பியர், சூல்ஜர்,) வருகையால் விசைத்தறி தொழில் அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. ஆகவே, கைத்தறி ரக ஒதுக்கீட்டுச் சட் டம் போன்று விசைத்தறிக்கென தனிரக ஒதுக்கீட்டுச் சட்டம் கொண்டு வர வேண்டும்.
விசைத்தறியாளர்கள் தானி யங்கி தறிகள் வாங்குவதற்கு 50 சதவீத மானியமும், வங்கி கடனும் வழங்க வேண் டும். ஜிஎஸ்டி அறிமுகப்படுத்திய பொழுது, செயற்கை இழை நூலான ரயான் நூலுக்கு, 18 %வரி விதிக்கப்பட்டது. பின்னர் அது 12 சதமாக குறைக்கப்பட்டது.
ரயான் நூல் துணிகளை விற்பனை செய்யும் பொழுது, 5% விற்பனை வரி போடப்படுகிறது. எஞ்சிய 7%ம் உள்ளீட்டு வரி இருப்பாக வருகிறது. அந்த 7 சதத்தை பெறுவதற்கு நூல் கொள்முதல் செய்த நாளிலிருந்து மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிறது. அதனால், எங்கள் தொழில் முதலீடுகள் அனைத்தும், வரி இருப்பாக மாறிவிடுகிறது.
அதனால் நூல் கொள்முதல் செய்வதற்கு, மேலும் கடன் பெறுவதற்கான சூழல் ஏற்படுகிறது.எனவே ரயான் நூலுக்கு வரி 12 சதத்திலிருந்து 5% ஆக குறைக்க வேண்டும். மின் உற்பத்தியை விசைத்தறிக்கூடங்களில் செய்ய சோலார் பேனல்களை நிறுவுவதற்கு, 50 சதம் மானியம், 50 சதம் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.



