கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்கான தண்ணீரை கலெக்டர் மற்றும் எம்எல்ஏ., ஆகியோர் திறந்து வைத்தனர்.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் 9,012 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 120 நாட்களுக்கு முதல் போக விவசாய பாசனத்திற்கான தண்ணீரை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் திறந்து வைத்து, தண்ணீரில் மலர் தூவினர்.
இது குறித்து கலெக்டர் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, கிருஷ்ணகிரி அணையில் இருந்து வலது மற்றும் இடதுபுற பிர தான கால்வாய்கள் வழியாக முதல்போக பாசனத்திற்காக விவசாய பெருமக்களின் கோரிக் கையினை ஏற்று 9,012 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் இன்று ( நேற்று) முதல் வருகிற நவம்பர் மாதம் 12ம் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும்.
அணையில் தற்போது உள்ள நீர் அளவினை கொண்டும், நீர் வரத்தினை எதிர் நோக்கியும் அணையின் வலதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 75 கன அடி வீதமும், இடதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 76 கன அடி வீதம் என மொத்தம் 151 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதன் மூலம் கிருஷ்ணகிரி தாலுகாவில் உள்ள பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சவுட்ட அள்ளி, தளிஅள்ளி, கால்வே அள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஅள்ளி, எர்ரஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், காவே ரிப்பட்டணம், பாலேகுளி, மாரி செட்டிஅள்ளி, நாகோஜனஅள்ளி, ஜனப்பரஅள்ளி மற்றும் பையூர் ஆகிய 16 ஊராட்சிகளில் உள்ள 9,012 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இன்றைய நிலவரப்படி, அணையின் மொத்த உயரமான 52 அடியில் 50.95 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு 267 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையின் ஊற்றுக்கால்வாயில் 12 கன அடியும, ஆற்று மதகுகளில் 255 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
எனவே, விவசாய பெருமக்கள் விவசாயத்திற்கு நீரினை சிக்கனமாக பயன்படுத்தி, அதிக மகசூல் பெற வேண்டும். மேலும் நீர் பங்கீட்டு பணிகளில் நீர்வள ஆதாரத்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், துணை ஆட்சியர் (பயிற்சி) க்ரிதிகாம்னா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், வேளாண்மைத் துறை இணை இயக்குனர் காளியப்பன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அறிவொளி, உதவிப் பொறியாளர் பொன்னிவளவன், தாசில்தார் சின்னசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர் மற்றும் நகர்மன்ற துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட திமுக அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், நகர பொறுப்பாளர் அஸ்லாம், நகர் மன்ற உறுப்பினர்கள் வேலு மணி, மீன்ஜெயகுமார், மதீன், சீனிவாசன், சந்தோஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், தனசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



