ஈரான் – இஸ்ரேல் மோதலில் புதிய திருப்பமாக ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் சமாதானத்தை நாட வேண்டும் என்றும் பதில் தாக்குதல் தொடுத்தால் தங்களின் பதிலடி தற்போது நடத்தப்பட்ட தாக்குதலை விட மிக வலிமையானதாக இருக்கும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
மறுபுறம், தங்களின் இறையாண்மையை தற்காத்துக்கொள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் என ஈரான் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஈரான் ராணுவம் பதில் தாக்குதலை தொடங்கியது. ஒரு வாரத்துக்கும் மேலாக இந்த தாக்குதல் நீடித்து வருகிறது.
இஸ்ரேல் &ஈரான் மோதலில் தங்களுக்கு தொடர்பில்லை என கூறிவந்த அமெரிக்கா பின்னர், ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஆலோசித்து வந்தது. இதன் தொடர்ச்சியாகதான் தற்போது ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் நிலத்துக்கு அடியில் அமைந்திருக்கும் அணுசக்தி நிலையங்களை தாக்குவது இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்தது.
அதற்கான பயங்கர குண்டுகள் (ஜிபியு 57) அமெரிக்காவிடம் மட்டுமே இருப்பதாக கருதப்பட்ட நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிநவீன பி2 விமானங்கள் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. 7 பி2 போர் விமானங்களில் தலா இரு ஜிபியு 57 ரக வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டன.
இந்த வெடிகுண்டுகள் போர்டோ உள்ளிட்ட 3 அணுசக்தி தளங்களின் மீது துல்லியமாக வீசப்பட்டன. இவை 200 அடி ஆழத்துக்கு பூமியை துளைத்து சென்று வெடித்துச் சிதறின. இதில் ஈரானின் அணுசக்திக்கான முக்கிய கேந்திரமாக திகழ்ந்த போர்டோ அணுசக்தி தளம் முழுமையாக தகர்க்கப்பட்டது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
ஈரான் மீது நடத்திய தாக்குதல் குறித்து பேசிய டிரம்ப், ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி அழித்து விட்டதாக தெரிவித்தார்.
அமெரிக்காவின் தாக்குதலை ஈரானும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் அமெரிக்காவை இஸ்ரேல் வெகுவாகப் பாராட்டியுள்ளது.
அமெரிக்கா நடத்திய தாக்குதலை அடுத்து இஸ்ரேல் மீது ஈரான் இன்று மீண்டும் ட்ரோன்கள், மிகப்பெரிய ஏவுகணைகள் மூலம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இந்தத் தாக்குதலில் குறைந்தது 16 பேர் காயமடைந்ததாக இஸ்ரேல் அவசரகால சேவை முகமை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும் நேரடித் தாக்குதலில் ஈடுபட்டுள்ள நிலையில் இஸ்ரேல் & ஈரான் இடையே போர் பதற்றம் தணிவதற்கான வழிகள் மூடப்பட்டு விட்டன. ஈரானை தாக்கியதன் மூலம் மத்திய கிழக்கில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதிய போரை தொடங்கி வைத்துள்ளார் என்றே சொல்லலாம்.
அமெரிக்காவின் இந்த ராணுவ நடவடிக்கை இஸ்ரேல் – ஈரான் மோதலை மேலும் அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளதுடன், சவுதி அரேபியா, ஏமன் உள்ளிட்ட இஸ்லாமிய மற்றும் அரபு நாடுகளிடமிருந்தும் கடுமையான எதிர்வினைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஈரானுக்கு ஆதரவாக ஒருங்கிணைய வேண்டும் என துருக்கி அதிபர் அறைகூவல் விடுத்துள்ளார். கருங்கடலில் அமெரிக்கப் போர்க் கப்பல்களைத் தாக்குவோம் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆக, ஏற்கனவே ரஷ்யா – உக்ரைன் போர் பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியதால் மத்திய கிழக்கில் பதற்றம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
இது மூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமோ என்ற அச்சம் உருவாகி இருக்கிறது. அது நடந்து விடக்கூடாது என்பதே அமைதியை விரும்பும் அனைத்து உலக நாடுகளின் விருப்பம்!



