fbpx
Homeபிற செய்திகள்‘துருக்கியைப் புறக்கணிப்போம்’

‘துருக்கியைப் புறக்கணிப்போம்’

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மூண்ட ராணுவ மோதலின்போது பாகிஸ்தானுக்கு அரசியல் மற்றும் ராணுவ ஆதரவை வழங்க துருக்கி முன்வந்தது. பாகிஸ்தானுக்கு ஆதரவு வழங்கிய துருக்கிக்கு இந்தியாவில் எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளது.

ஏராளமான இந்தியர்கள் துருக்கி விடுமுறைப் பயணத்தை ரத்து செய்துள்ளனர். வர்த்தகர்கள் துருக்கியில் இருந்து எந்தப் பொருளையும் வாங்க மாட்டோம் என முடிவு செய்துள்ளனர்.


துருக்கியில் இருந்து சாக்லெட், பிஸ்கட், சருமப் பராமரிப்புப் பொருள்கள் இந்தியா அதிகம் இறக்குமதி செய்கிறது. அந்நாட்டிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களையும் காலவரையறை இன்றி ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பதாக அனைத்து இந்திய பயனீட்டு பொருள் விநியோகிப்பாளர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது அந்நாட்டுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ‘துருக்கியைப் புறக்கணிப்போம்’ என்ற பிரசாரம் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு, முஸ்லிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட துருக்கி, காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் அணுகுமுறையை ஆதரித்ததே முக்கிய காரணமாகும்.


அதனைத் தொடர்ந்து, ராணுவ மோதலின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவளித்த நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வர்த்தகத் தொடர்பைத் துண்டிக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு முழக்கம் எழுப்பப்பட்டு வருகிறது.


ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா இஸ்லாமியா, மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல இந்தியப் பல்கலைக்கழகங்கள் துருக்கிய கல்வி நிறுவனங்களுடனான தொடர்பை நிறுத்திவிட்டன.


பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு எந்த நாடு ராணுவ ரீதியாக உதவ முன்வந்தாலும் அதனை இந்திய மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.


தேசிய நலனுக்காக வணிகம் உள்ளிட்ட எந்த வகையிலான உறவையும் அதனால் எத்தகைய நலன் விளைந்தாலும் பெரும் வருமான இழப்பு ஏற்பட்டாலும் அதனையெல்லாம் துச்சமாகக்கருதி அந்த நாட்டுடன் நல்லுறவு தேவையில்லை என்று முடிவெடுக்கும் உணர்வு ஒவ்வொரு இந்தியருக்கும் உண்டு. ஏனென்றால் எல்லாவற்றையும் விட அவர்களுக்கு தேசமே அதிமுக்கியம்.


தேசிய நலனுக்காக துருக்கியைப் புறக்கணித்து ஓரணியாக எதிர்ப்போம்!

படிக்க வேண்டும்

spot_img