வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை அமைந்துள்ளது. இங்கு வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கியது. இதற்கு இப்பகுதி மக்கள் பெருவெளியின் மையப்பகுதியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க கூடாது என்றும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்டு அதில் சர்வ தேச மையத்தை அமைக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இதுதொடர்பாக 12-ந்தேதி (நேற்று) விரிவாக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்படும் 34 ஏக்கர் நிலங்கள் தற்போது யார் பெயரில் உள்ளது என்ற விவரத்தை அளிக்கவேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாருக்கு உத்தரவிட்டது. மேலும் சிறுவர்கள்,குழந்தைகளின் பாதுகாப்பு கருதி சத்தியஞான சபை திடலில் தோண்டப்பட்ட பள்ளங்களை சுற்றி வேலி அமைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தோண்டப்பட்ட பள்ளங்களை சுற்றி வேலி அமைக்கும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.



