மழை வெள்ள பாதிப்புகளை ஆராய்ந்த மத்திய அரசு குழு தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீரென முரண்பாடான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
டெல்லியில் அவர் பேட்டி அளித்த போது, தென்மாவட்ட வெள்ளப் பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. ஒருநாள் முழுவதும் டெல்லியில் இருந்து இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போகிறபோக்கில் சந்தித்துக்கொள்ளலாம் என்ற தோரணையில் பிரதமர் மோடியை இரவில் சந்தித்தார் என் மக்களை நான் பார்க்க வேண்டும் என்று கூட்டணியினரிடம் சொல்லிவிட்டு, ‘என் மண் என் மக்கள்’தான் முக்கியம் என்று முதலமைச்சர் சென்றிருக்க வேண்டாமா? என்று விமர்சித்தார்.
இந்த நிலையில்தான் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடியில் இன்று வெள்ளப்பாதிப்பை பார்வையிட உள்ளார். வெள்ள பாதிப்புகளை அவர் இத்தனை நாள் தாமதமாக பார்வையிட முடிவு செய்தது ஏன்?
அவரின் இந்த முடிவிற்கு பின் முக்கியமான காரணங்கள் உள்ளது.
தென்மாவட்ட வெள்ளப் பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. அப்படி ஒரு வழக்கம் இல்லை. எந்த மாநிலத்திற்கும் இப்படி அறிவித்தது இல்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
அதோடு அவர் பேட்டியில் கூறிய விஷயங்கள், பேசிய கருத்துகள், அவர் பேசிய தொனி ஆகியவை கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. தமிழ்நாட்டு மக்களின் மனதில்… அதுவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுத் தவித்த மக்களின் மனதில் முள்ளாகத் தைத்தது.
இந்த நிலையில் மத்திய உளவுத்துறை சார்பாக டெல்லிக்கு முக்கிய அறிக்கை சென்றுள்ளது. நிர்மலா சீதாராமனின் பேட்டி பாஜகவினருக்கும் அதிருப்தியை கொடுத்துள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக இது மாறும். முக்கியமாக தென் மாவட்டத்தில் பாஜகவிற்கு எதிராக மாறும். நெல்லை, தூத்துக்குடியில் போட்டியிட பாஜக முயன்று வருகிறது.
ஆனால் அங்கே மத்திய அரசு சார்பில் செல்லாமல் இருப்பது பின்னடைவைத் தரும். இதில் இருந்து தப்பிக்க ஒரே வழி அமைச்சர் ஒருவர் அங்கே செல்ல வேண்டும் அதுவும் நிர்மலா சீதாராமனே போக வேண்டும் என்று மத்திய உளவுத்துறை கணித்து சொன்னதாம்.
இதையடுத்து டெல்லி ஆலோசனையின் பெயரில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடிக்கு இன்று வந்து வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட்டு வருகிறார்.
வெள்ளப்பாதிப்பிலும் அரசியல் என்பது இந்திய நாட்டில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. எது எப்படியோ தென் மாவட்ட வெள்ள நிவாரணத்துக்கு பெரும் நிதி தேவைப்படுகிறது.
ஒன்றிய அமைச்சர் அதுவும் நிதியமைச்சரே வந்து ஆய்வு செய்வது நல்லது தானே. அப்போது தானே கேட்ட நிதி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்காவது நிதி கிடைக்கும்.
யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அதிக தொகையை நிவாரணப் பணிகளுக்கு ஒதுக்கி, தன் மீதான தமிழ்நாட்டு மக்களின் அதிருப்தியை நிர்மலா சீதாராமன் சரி செய்வது ஒன்றே சரியானதாக இருக்கும்.
அதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிச்சயம் செய்வார். 2024 தேர்தலை மனதில் வைத்தாவது தமிழ்நாட்டு மக்களின் மனதில் இடம்பிடிக்க அவருக்கு வேறு வழியில்லை என்பதே உண்மை.
தென்மாவட்ட மக்களின் துயர் துடைக்கப்படட்டும்!



