தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களை சமீபத்தில் பெய்த அதி கனமழை, புரட்டிப்போட்டது. மிக்ஜாம் புயல் சென்னையை கடுமையாகத் தாக்கி, அதிலிருந்து தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை, அதிரடி மீட்புப்பணியால் மக்கள் மீட்டெடுக்கபட்ட நிலையில், இன்னொரு இயற்கைப் பேரிடராக தென் மாவட்டங்களில் பெரு மழை, வெள்ளம் அமைந்து விட்டது. இதில் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மிக்ஜாம் புயல் நிலவரத்தை சரியாக கணித்து கூறிய வானிலை ஆய்வு மையம், தென் மாவட்ட அதி கன மழை, வெள்ளம் பற்றி துல்லியமாகக் கணிக்கத் தவறி விட்டது என்ற சர்ச்சை எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலினே முன்வைத்தார். பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோரும் தங்கள் அதிருப்தியைப் பதிவு செய்தனர்.
ஆனால் இதிலும் தங்களின் அரசியல் மூக்கை நுழைத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தும் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது என்று குற்றம்சாட்டினர்.
சென்னை வானிலை மையத்தை மேம்படுத்தி இருக்கிறோம் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார். அப்படியிருக்க, நாடு சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் ஆகியும் வானிலையைத் துல்லியமாகக் கணிக்கும் நவீன தொழில்நுட்பம் ஏன் நமக்கு கிடைக்கவில்லை? டாபுலர் (ரேடார்) அமைக்கப்பட்டது. அது ஏன் செயல்படவில்லை?
நமது வானிலை ஆய்வு மையத்தைக் குறை சொல்லிப்பயனில்லை. அவர்கள் இருக்கும் தொழில்நுட்பத்தை வைத்து தான் கணிக்க முடியும். தூத்துக்குடியில் இத்தனை செ.மீ. மழை பெய்யும் என ஏன் சொல்ல முடியவில்லை? என்பது தான் கேள்வி.
பல வெளிநாடுகளில் புயல், மழை, சூறாவளியைத் துல்லியமாக கணித்து செயல்படுகிறார்கள். அவர்களுக்கு மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?
இது நம் நாட்டு மக்களின் குறிப்பாகப் பாதிக்கப்பட்டவர்களின் கேள்வி மட்டுமல்ல. வேதனை பெருமூச்சாகவும் இருக்கிறது.
வானிலை ஆய்வு மையம் கணிக்கத்தவறி விட்டதா? அரசு நடவடிக்கை எடுக்கத்தவறி விட்டதா? என்று அரசியல்வாதிகள் பட்டிமன்றம் நடத்தும் அவலம் தான் இங்கே அரங்கேறுகிறது.
ஆக, உலகத்தின் பல நாடுகளில் சிறப்பாக செயல்படும் வானிலை கணிப்பு தொழில்நுட்பம் நம்மிடத்திலும் இருக்க வேண்டும். இதில் ஒன்றிய அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டியக் கட்டாயத்தைத் தான் சென்னை, தூத்துக்குடி வெள்ளம் சுட்டிக்காட்டுகிறது.
இனியும் மெத்தனம் வேண்டாம்!



