fbpx
Homeதலையங்கம்கேள்விக்குறியாக மாறிய நாடாளுமன்ற பாதுகாப்பு?

கேள்விக்குறியாக மாறிய நாடாளுமன்ற பாதுகாப்பு?

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், கடந்த 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று வழக்கம் போல் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வந்தது. எம்.பிக்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென பார்வையாளர்கள் மாடத்திலிருந்து 2 இளைஞர்கள் அரங்கிற்குள் குதித்தனர்.

அவர்கள் புகை குண்டுகளை அவைக்குள் வீசினர். இதனை கண்டு எம்.பி.-க்கள் பதறினர். நாடாளுமன்றத்தில் நுழைந்து அத்துமீறலில் ஈடுபட்ட சாகர் சர்மா, மனோரஞ்சன்(35), மற்றும் நீலம் (42) என்ற பெண், அமோல் ஷிண்டே (25). ஆகியோர் கைதாகி உள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழையும் எவரும் அடையாள அட்டை காண்பிக்க வேண்டும். அதனைப் பெற நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற அதிகாரியின் பரிந்துரைக் கடிதம் வேண்டும்.

நாடாளுமன்றக் கட்டட நுழைவாயில்களில் நுழையும் அதிகாரிகளும் அலுவலர்களும் மெட்டல் டிடெக்டர் பரிசோதனையை தாண்டிதான் செல்ல வேண்டும்.

பார்வையாளர்களின் பகுதிக்கு செல்வதற்கு முன் எல்லா பார்வையாளர்களுமே மெட்டல் டிடெக்டர் பரிசோதனையை தாண்டித் தான் செல்ல வேண்டும்.
இவை எல்லாவற்றையும் மீறி நாடாளுமன் றத்துக்குள் புகைக் குண்டுகளை போன்ற ஆபத்தான பொருட்களை மர்ம நபர்கள் வீசியுள்ளனர் என்பது நாட்டையே கதிகலங்க வைத்துள்ளது.

இது பெரும் பாதுகாப்பு குறைபாட்டையே காட்டுகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த சம்பவத்தை கடுமையாகக் கண்டித்து இருக்கின்றனர்.

அத்துமீறலால் அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது நிம்மதியளித்தாலும், நாடாளுமன்றத்திற்குள் மிகவும் எளிதாக நுழைந்து இத்தகைய தாக்குதலை நடத்த முடியும் என்பது மிகவும் கவலையளிக்கிறது.

நுழைந்தது தீவிரவாதியாக இருந்தால் எங்களில் 100 எம்பிக்களையாவது சுட்டு வீழ்த்தி இருப்பானே…என்ற கார்த்தி சிதம்பரம் எம்.பி.யின் குற்றச்சாட்டை யாரும் உதாசீனப்படுத்தி விட முடியாது.

மேலும் நாடாளுமன்றத்தில் கடந்த 2001-ஆம் ஆண்டு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட அதே நாளில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் பல்வேறு வினாக்களை எழுப்பியுள்ளது.

நாடாளுமன்றத்துக்குள் வண்ணப்புகைக் குப்பிகளுடன் நுழைய முடியும் போது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் ஆகியவற்றுடன் ஏன் நுழைய முடியாது? என்பது தான் முதன்மையான கேள்வி மக்கள் மனதில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

இது குறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிடப்பட வேண்டும். பாதுகாப்பில் கோட்டை விட்ட அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை பாய வேண்டும்.

இந்தியாவின் குடியரசுத் தலைவர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பணியாற்றக்கூடிய நாடாளுமன்றம் எந்தவித பாதுகாப்புக் குறைபாடும் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம் அல்லவா?
அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு முன்னெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை!

படிக்க வேண்டும்

spot_img