அதிமுகவை பொறுத்தவரை, எப்போதுமே பெண்கள் வாக்கு வங்கி அதிகம். திமுகவை பொறுத்தவரை, எப்போதுமே சிறுபான்மையினர் வாக்கு வங்கி அதிகம். ஆனால், இந்த முறை, பெண்கள் வாக்கும்சரி, சிறுபான்மையினர் வாக்கும்சரி, ஒருசேர திமுக பக்கம் சென்றுள்ளது, ஏற்கனவே, 4 ஆக கட்சி உடைந்துள்ள நிலையில், அதிமுகவுக்கான சறுக்கலாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
அதனால்தான், பாஜகவை கூட்டணியிலிருந்து கழட்டிவிடுவது என்ற அதிரடி முடிவை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால், திமுகவோ, அதிமுகவின் முடிவை, கடுமையாக விமர்சித்து வருகிறது. பாஜக கூட்டணி விஷயத்தில் அதிமுக மீதான நம்பகத்தன்மையை கேள்வி எழுப்பி வருகிறது.
போதாக்குறைக்கு, அதிமுகவில் உள்ள பாஜக ஆதரவு தலைவர்களே, எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கிறார்களாம். அதனால், பாஜகவை கடுமையாக தாக்கி பேசவும் முடியாமல், அதிமுகவின் பாஜக ஆதரவாளர்களை கடிந்து கொள்ளவும் முடியாமல், சிறுபான்மை வாக்குகளை மொத்தமாக இழக்கவும் முடியாமல், எடப்பாடி பழனிசாமி தவித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படிப்பட்ட சூழலில்தான், 4 மாநில தேர்தல் முடிவுகள் வந்துள்ளன.
தெலுங்கானாவில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டு, பரிதாபமான நிலைமையில் பாஜக இருந்தாலும், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜகவின் விஸ்வரூபமானது, நாட்டையே மலைக்க வைத்துள்ளது.
இந்த தேர்தலின் முடிவுகள், வரப்போகும் எம்பி தேர்தலுக்கான அச்சாரமாகவும் கருதப்படுகிறது. அத்துடன் பாஜகவின் வளர்ச்சியும், செல்வாக்கும் மேலும் அதிகரித்துள்ளதாகவும் கணக்கிடப்படுகிறது.
இந்த நிலையில் தன்னுடைய கூட்டணி முடிவில் இப்போதும் அதிமுக உறுதியாக இருக்குமா? அல்லது மறுபரிசீலனை செய்யுமா? அதிமுகவின் பல தலைவர்களின் தலைக்கு மேல் ஏகப்பட்ட “கத்திகள்” தொங்கி கொண்டிருக்கும்போது, பாஜக அல்லாத கூட்டணி சாத்தியமா? என்ற கேள்விகளெல்லாம் எழுகிறது.
ஒருவேளை, கூட்டணி முறிவு என்று அறிவித்துவிட்டு, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்க நேர்ந்தால், அது அதிமுகவுக்கான இன்னொரு சறுக்கலாக கருதப்படும். ஆக, சிறுபான்மையினர் வாக்கு வேண்டுமென்றால், பாஜகவை ஒதுக்கி வைத்துதான் ஆக வேண்டும் அல்லது பாஜக தயவு வேண்டுமானால், சிறுபான்மையினர் வாக்குகளை இழக்கவும் தயாராவதுடன், பலம்பொருந்திய திமுகவையும் எதிர்க்க முடியாத நிலைமையும் அதிமுகவுக்கு வந்துவிடும்.
4 மாநில தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த அபார வெற்றியானது, பாஜகவை தள்ளிவைக்கும் கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவே ஒலிக்கத் துவங்கியிருக்கிறதாம்.
என்ன செய்யப்போகிறது அதிமுக?



