fbpx
Homeதலையங்கம்நிதிஷ் குமாரின் தேர்தல் வியூகம் வெற்றி தருமா?

நிதிஷ் குமாரின் தேர்தல் வியூகம் வெற்றி தருமா?

வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் பா.ஜ.க-வை வீழ்த்தி வெற்றிக் கனியை ருசிக்க பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதிஷ் குமார் வியூகம் வகுத்து இருக்கிறார். இதன் ஒருபகுதியாக அவர் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் இறங்கியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்தார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான ஹேமந்த் சோரன் ஆகியோரை சந்தித்து பேசி இருக்கிறார்.

இதில் மம்தா பானர்ஜி மட்டும் பிடிகொடுக்காமல் இருந்து வந்தார். இதற்கிடையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை பெற்றிருக்கிறது.
இதையடுத்து மம்தா தனது முடிவை மாற்றியிருக்கிறார்.

காங்கிரஸின் கர்நாடக வெற்றி மம்தாவுக்கு மட்டும் இல்லாமல் பிற எதிர்க்கட்சிகளுக்கும் பாஜக-வை எதிர்ப்பதற்கு புதிய உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. இதில் நிதிஷ் குமாரும் அடங்குவார். இதையடுத்து அவர் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் தனது பணியை மேலும் வேகமாக மேற்கொண்டுள்ளார்.

இதன் ஒருபகுதியாக அவர் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்தித்தார். கெஜ்ரிவால் அரசுக்கு தனது முழு ஆதரவை வழங்குவதாக தெரிவித்தார். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரண்டு வெற்றி பெற வேண்டும் எனவும் இருவரும் விவாதித்தனர்.

இதனை தொடர்ந்து இருநாட்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை நிதிஷ்குமார் சந்தித்தார். அப்போது 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது, எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை பாட்னாவில் நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த சந்திப்புக்கு பிறகு தனது ட்விட்டரில் பக்கத்தில் கார்கே, “இனி நாடு ஒன்றுபடும்“ என குறிப்பிட்டுள்ளார்.

நிதீஷ் குமார் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோரை சந்திக்க இருக்கிறார்.

அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் அவர்களுக்குள் ஈகோ இல்லாமல் ஒன்றுபட வேண்டியது தான் இப்போது முக்கியம்.

இவ்வாறு எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் நிதிஷ் குமாரின் வியூகம் வெல்லுமா? எந்த அளவுக்கு வெற்றி கிட்டும் என்பது போக, போகத் தான் தெரியும்!

படிக்க வேண்டும்

spot_img