அதிமுகவில் இனிமேல் எடப்பாடி பழனிசாமி தான் எல்லாமே. அவரைக் கட்சியின் பொதுச் செயலாளராக நீதிமன்றமும் அங்கீகரித்து விட்டது. தேர்தல் ஆணையமும் ஓகே சொல்லியாச்சு. டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தாங்கள் தான் அதிமுக என்பதை உறுதிப்படுத்தி பாஜகவுடனான உறவையும் புதுப்பித்துக் கொண்டார், இபிஎஸ்.
இனிமேல் ஓ.பன்னீர்செல்வம் தொல்லை இருக்காது. டெல்லியின் அழுத்தம் வராது என்ற கனவில் எடப்பாடி இருந்தாலும் பின்னணியில் பல்வேறு அரசியல் கணக்குகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
அதிமுகவின் பிடி தங்களை விட்டு விலகி சென்றுவிடக் கூடாது என்று பாஜக மிக கவனமாக காய் நகர்த்தி வருகிறது. இதில் ஒரு விஷயம் என்னவென்றால் ஒன்றுபட்ட அதிமுகவை பார்த்து விட வேண்டும்.
அதன் செல்வாக்கை வரும் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றே பாஜக கருதுகிறது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பலமுறை வலியுறுத்தி விட்டார்.
ஆனால், அதை மட்டும் கேட்காதீர்கள். தனக்கென்று ஒரு செல்வாக்கு உள்ளது. வரும் தேர்தல்களில் நிரூபித்து காட்டுகிறேன். அதிமுகவால் பாஜகவும், பாஜகவால் அதிமுகவும் பலனடையும் என்பது போல் இபிஎஸ் பதில் அளித்துள்ளார்.
இருப்பினும் ஓ.பன்னீர்செல்வத்தை அப்படியே விட்டு விட டெல்லி தலைமைக்கு விருப்பம் இல்லை. அதேசமயம் எடப்பாடி முடிவிற்கும் மதிப்பளிக்க நினைக்கிறது.
இதன் வெளிப்பாடு தான், டெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அமித் ஷா அளித்துள்ள பேட்டியில் எதிரொலித்தது.
அமித் ஷாவிடம் அதிமுக விவகாரம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதில், அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையிலான பிரச்சினையில் தலையிட விரும்பவில்லை. ஏனெனில் இது அக்கட்சியின் உள் விவகாரம். அவர்கள் இருவரும் பேசி சுமூக முடிவை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவின் தனிப்பட்ட பிரச்சினை என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் பேசிப் பார்க்கலாம் என்பது போல ஒரு பதிலை செருகி இருக்கிறார். இது உற்று கவனிக்கத் தக்கது.
இது ஓபிஎஸ் தரப்பிற்கு சற்றே ஆறுதல் அளித்தாலும், எடப்பாடிக்கே அதிக மதிப்பளிக்க வேண்டிய தர்மசங்கடமான சூழ்நிலையை பாஜகவுக்கு ஏற்படுத்தி விட்டது.
மக்களவை தேர்தல் வர இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், பாஜக தரப்பு தமிழகத்தில் எத்தனை இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதில் தற்போதே உறுதியாக இருக்கிறது.
தமிழகத்தில் 9 இடங்களை குறி வைத்து விட்டது.
தெற்கிலும், மேற்கிலும் தொகுதிகளை லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறது. இதை சரிகட்டும் வகையில் தான் ஓபிஎஸ் விஷயத்தை டெல்லி மீண்டும் எடுக்கிறதா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
பாஜகவின் சீட் கோரிக்கைக்கு அதிமுக உடன்படுமா? ஓபிஎஸ் என்ன ஆவார்? பாஜகவின் தேர்தல் கனவு பலிக்குமா? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல அரசியல் களம் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.
நாமும் காத்திருப்போம்!



