டெல்லியில் பல வாரங்களாக இந்திய மல்யுத்த வீராங்கனைகளான பெண்கள், இரவு – பகல் பாராமல், அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அகில இந்திய மல்யுத்த சம்மேளன அமைப்பின் தலைவரான பிரிஜ்பூஷன் சரண்சிங் என்ற பாஜக எம்.பி. மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்படி, பாலியல் சீண்டல், பாலியல் கொடுமைகள் செய்தது குறித்து வழக்குப் பதிவு செய்த நிலையில், அவரைக் கைது செய்து தங்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை முன்வைத்து போராடி வருகின்றனர்.
இந்த குற்றச்சாட்டையும் வீராங்கனைகளின் போராட்டத்தையும் டெல்லி சட்டம் -& ஒழுங்கை தம் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கும் பா.ஜ.க. ஒன்றிய அரசின் உள்துறை அதுபற்றி பாராமுகத்துடன் ஏனோதானோ மனப்பான்மையுடன் கையாண்டு வருகிறது.
உலகத்தில் நமது நாட்டின் பெருமையைப் பறை சாற்றும் மல்யுத்த வீராங்கனைகளை அதுவும் தலைநகர் டெல்லியில் நடுத்தெருவில் இப்படி அமர வைத்து வேடிக்கை பார்ப்பது நியாயமா? இது உலக அரங்கில் இந்தியாவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தாதா?
குற்றவாளி பாஜக எம்பியாக இருப்பதால் தான் ஒன்றிய பாஜக அரசு ஒருதலைப் பட்சமாக நடந்துகொள்கிறது என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இதனைத்தான் போராடும் வீராங்கனைகளும் முன்வைக்கின்றனர். பாலியல் நீதி, சமூகநீதிக்கு எதிராக ஒன்றிய – உள்துறை அமைச்சகம் நடந்துகொள்வது வன்மையான கண்டனத்திற்குரிய தாகும்.
குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், குற்றம் சுமத்தப்பட்டோரைக் கைது செய்து காராக் கிரகத்தில் அடைப்பதுதானே சட்டம் &- ஒழுங்கைப் பாதுகாக்கும் சரியான நீதியாகும்?.
தேசிய வீராங்கனைகளின் குற்றச்சாட்டுக்கே நீதி கிடைப்பதில் இத்தனை இடையூறு ஏற்பட்டால் சாமானிய மக்களின் நிலை என்னவாக இருக்கும்? யோசித்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. அரசியல் பின்புலம் இருந்தால் எந்தக் குற்றத்தைச் செய்தாலும் தப்பித்து விடலாம் என்ற நிலை ஒருபோதும் உருவாகி விடக்கூடாது.
தனது குற்றமற்ற தன்மையை நீதிமன்றங்களில் நிரூபித்து வெளியே வரவேண்டிய மல்யுத்த வீரர்களின் சங்கத் தலைவரான பா.ஜ.க. எம்.பி., என்ன விளக்கம் சொல்லுகிறார் தெரியுமா? இது காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலாம்.
இதைவிட ‘ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் வேறென்ன இருக்க முடியும்? அரசியல் சார்பு, சாயம் இல்லாத மகளிர் உரிமை காக்கும் போராட்டத்தினை திசை திருப்பும் முயற்சியே இது.
மல்யுத்த வீரர்களின் இந்த நியாயமான அறப்போரை காங்கிரஸ் மட்டுமா ஆதரிக்கிறது? ஏன், ஆம் ஆத்மி ஆதரிக்கவில்லையா? தி.மு.க. ஆதரவு தெரிவிக்கவில்லையா? நியாய உணர்வுள்ள அனைவருக்கும் இது மன வலியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் ஓராண்டைக் கடந்த தங்கள் போராட்டம் மூலம் விவசாயிகள் வெற்றிக்கொடி நாட்டினார்கள் என்பது நினைவிருக்கும். மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்திற்கும் வெற்றி நிச்சயம் கிடைக்கும்; நியாயம் கிடைக்கும்.
குற்றவாளி தற்காலிகமாக தப்பிக்கலாம். ஆனால் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது, மறக்காது!



