fbpx
Homeதலையங்கம்ஆன்லைன் சூதாட்டம் தடைசெய்ய வேறு வழி?

ஆன்லைன் சூதாட்டம் தடைசெய்ய வேறு வழி?

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ரோஸ்மியாபுரத்தைச் சேர்ந்த சிவன்ராஜ் என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மியில் 15 லட்சம் ரூபாய் வரை இழந்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்கொலை செய்வதற்கு முன்னதாக தனது நண்பர்களை தொடர்பு கொண்ட சிவன்ராஜ் ஆன்லைன் ரம்மியால் மொத்த பணத்தையும் இழந்து விட்டதால் பணம் கேட்டு கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள். எனவே நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என கூறியுள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு நிகழ்ந்த 40வது தற்கொலை இதுவாகும். பட்டதாரி இளைஞரான சிவன்ராஜ் பெரும் பணத்தை இழந்த நிலையில், அவரது தந்தை, வீட்டு உடமைகளையும், கால்நடையையும் விற்றுக் கொடுத்த ரூ.1 லட்சத்தையும் சூதாடி இழந்துள்ளார். ஆன்லைன் சூதாட்டம் இளைஞர்களை எந்தளவுக்கு அடிமையாக்குகிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.

சிவன்ராஜை போன்று ஏராளமான இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்கின்றனர். பலர் தீராத தொல்லைக்கு ஆளாகித் தவிக்கின்றனர்.

இந்த உண்மைகளை அறிந்தும் ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி காலதாமதம் செய்து வருவதைக் கண்டிக்காத தலைவர்களும் இல்லை; சபிக்காத தமிழர்களும் இல்லை.

ஜனநாயகத்தில் மக்களின் உணர்வுகளை புரிந்து செயல்படாத… செயல்பட விரும்பாத நிலை உருவாவது கவலை தரக்கூடியது. இதுபோன்ற செயல்பாடுகள் ஜனநாயகத்தைக் கேலி கூத்தாக்கி விடும்.

ஆகவே, ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் இனியும் தொடரக்கூடாது. தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசியலமைப்பு சட்டத்தின் 162வது பிரிவை பயன்படுத்துவது உள்ளிட்ட மாற்று வழிகளை தமிழ்நாடு அரசு ஆராய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரு பொருள் குறித்து சட்டசபையில் இயற்றப்பட்ட சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருக்கும்போது, அவசரம் கருதி அதே பொருள் குறித்து நிர்வாக ஆணை பிறப்பிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவு கூறுகிறது.

அதனால், அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்து தமிழ்நாடு அரசு நிர்வாக ஆணை பிறப்பிக்க முடியும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஏதோ ஒரு வழியில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு. ஒவ்வொரு முறை தற்கொலை நிகழும் போதும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக குரலெழுப்பப்படுகிறது.

ஆனால் அந்த குரல் யார் காதில் விழ வேண்டுமோ… அவர்கள் காதில் அது விழத்தான் செய்கிறது. ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்கொலியாக… தானே அடங்கிப் போகிறது.

அடுத்த தற்கொலை நடக்கும் முன், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை வந்தால் அது அதிசயம் தான். ஆன்லைன் சூதாட்டத் தற்கொலை தொடர்கதைக்கு யாரேனும் ஓர் முற்றுப்புள்ளி வையுங்களேன்!

படிக்க வேண்டும்

spot_img