fbpx
Homeதலையங்கம்ஆசிரியர்கள் போராட்டமும் முதல்வரின் மனிதநேயமும்!

ஆசிரியர்கள் போராட்டமும் முதல்வரின் மனிதநேயமும்!

தமிழகத்தில், 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அதே ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அடிப்படை ஊதிய முரண்பாடு உள்ளது. இந்த ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த முரண்பாட்டை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், தங்களது குடும்பத்துடன், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 100 ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர் என்பது மிகுந்த வேதனைக்குரியதாகும்.

பள்ளிக்கல்வித் துறை செயலாளர் காகர்லா உஷா மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து ஆசிரியர்களின் போராட்டம் 6வது நாளாக தொடர்ந்தது.

இந்த நிலையில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் ஆறு நாட்கள் நடத்திய பட்டினிப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அணுகுமுறை வரவேற்கத் தகுந்தது. இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கப் பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட், ‘‘எங்களது கோரிக்கையை பரிசீலிக்கக் குழு அமைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கோரிக்கைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும், முதலமைச்சரின் அறிவிப்பின் அடிப்படையிலும் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்கிறோம்‘’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் முதலமைச்சரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

போராட்டம் நடத்திய ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கையில் உள்ள நியாயங்கள் ஒருபுறம் இருந் தாலும், முன்பிருந்த அ.தி.மு.க. அரசு ஒப்படைத்த காலியான கருவூலத்திலிருந்து மாற்றத்தை அடைய பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு, மு.க.ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய தமிழ்நாடு அரசு நிதிநிலையைச் சரிப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், ஒன்றிய அரசு நமக்கு நியாயமாகத் தரவேண்டிய பங்கைக்கூட தராமல் காலதாமதம் செய்து, நிதி நெருக்கடியை ஏற்படுத்துவதன்மூலம் ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு எதிரான மறைமுக ஒத்துழையாமையையும் நடத்தி வருவதை ஆசிரியப் பெருமக்கள் அறியாதவர்கள் அல்ல.

ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கை அரசின் கவனத்தை ஈர்த்து, இரண்டு முறை பேச்சு வார்த்தைகளுக்குப் பின், அதற்கென ஒரு தனி குழு போட்டு, அதன் கருத்துரையைப் பரிசீலனை செய்வோம் என்ற தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதே இப்பிரச்சினையில் நமது ஆசிரியப் பெருமக்கள் 50 விழுக்காடு வெற்றியை எட்டி விட்டனர் என்பதன் அடையாளமாகும். இதைப் புரிந்து, போராட்டத்தை முடித்திருப்பது பாராட்டத்தக்கதாகும்.

ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் நடை முறைக்குகந்த வகையில், அரசின் நிதிநிலைபற்றிச் சிந்திக்க வேண்டும். அதேநேரத்தில், முரண்பாடுகள் களையப்படவேண்டும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தின் பக்கத்தையும் முதல்வர் சிந்தித்து சிறப்பான தீர்வைத் தருவார் என்பதில் ஐயமில்லை.

இந்த ஆட்சி அனைத்துத் தரப்பினருக்கும் நல்லாட்சி என்பதை அறியாதவர்கள் அல்ல நம் ஆசிரியப் பெருமக்கள். ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை அறிந்து, குழு அமைத்த சமூக நீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டினைத் தெரிவித்துக் கொள்வோம்!

படிக்க வேண்டும்

spot_img