சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரித்துள்ளது. குறிப்பாக, சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் ஒமிக்ரான் பிஎப்.7 எனும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ், இந்தியாவிலும் புகுந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், நாடு முழுவதும் மீண்டும் கொரோனா நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. மக்கள் மாஸ்க் அணிய வேண்டுமெனவும், நெரிசலான இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர், கண்காணிப்பு மற்றும் பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் வலியுறுத்தினார். மேலும், மாநில அரசுகள் எந்த நிலையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
புதிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், நாட்டில் கொரோனா தொற்று விகிதம் வாரந்தோறும் சரிந்து வருவதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சராசரியாக தினசரி 153 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.
8 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் ஒருவருக்கு கூட தொற்று பரவவில்லை. உலக அளவில் மிகக் குறைவான தொற்று விகிதம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 163 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதித்துள்ளோர் எண்ணிக்கை 3,402ல் இருந்து 3,380 ஆக சரிந்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா தொற்றைக் காட்டி ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தை நிறுத்தச் சொல்வதில் அரசியல் இருக்கிறதோ என்ற சந்தேகம் பல தரப்புகளிலும் எழுந்துள்ளது. இது உண்மையா?
ஒன்றிய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக் கைகள் வரவேற்கத்தக்கவை- என்றாலும், இதனுள் ‘‘அரசியல்’’ புகுந்துள்ளதோ என்ற ஐயம் ஏற்பட இடம் தரலாகாது. தேவையற்ற பீதியைக் கிளப்பி, மக்களைக் கவலையும், குழப்பமும் அடையச் செய்வது தேவையற்றதாகும்.
அதற்கு முக்கிய காரணம், ஒன்றிய அரசின் மக்கள் நல் வாழ்வு – சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ‘‘ராகுல்காந்தி ஒற்றுமையை வலியுறுத்தி நடத்தும் தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்ய வேண்டும்‘’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளது தான்.
கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றுமாறு மட்டும் கூறி இருந்தால் போதுமே. காங்கிரஸ் ஒரு பொறுப்புள்ள கட்சி தானே. அதை விடுத்து யாத்திரையை நிறுத்துங்கள் என்று சொன்னது தான் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கொடுந்தொற்றுக்கூட அரசியல் ஆயுதமாக, எதிர்க் கட்சிகளின் விமர்சனக் குரல்வளையை நெரிக்க வாய்ப்பாக மாற்றப்படுகிறதோ என்ற கேள்வி அரசியல் கட்சிகளிடையே ஏற்படச் செய்தது சரியல்ல. முதலில் காங்கிரஸ் புகார் கூறியது. பின்னர் சிவசேனா கட்சியும் இக்கருத்தையே கூறியுள்ளது.
எது எப்படியோ, கொரோனா தொற்று மீண்டும் இந்தியாவில் பரவிட இடம் தரக்கூடாது. அதே நேரத்தில் இந்த விஷயத்தில் அரசியல் செய்வதும் அழகல்ல; ஏற்கத்தக்கதல்ல.
நாமும் மீண்டும் முககவசம் அணியத் தொடங்குவோம். சமூக இடைவெளியை பின்பற்ற முயற்சிப்போம். அது தானே நமக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது!



