fbpx
Homeதலையங்கம்‘ரெட் சிக்னல்’ மாறி ‘கிரீன் சிக்னல்’ விழுமா?

‘ரெட் சிக்னல்’ மாறி ‘கிரீன் சிக்னல்’ விழுமா?

பல ஆன்லைன் விளையாட்டுக்கள் சூதாட்டம் போல இருப்பதால், அதில் பண இழப்பிற்கான அபாயம் அதிகரித்துள்ளது. இதனால் தினமும் தற்கொலை போன்ற சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

நாடு முழுவதும் 322 மாவட்டங்களில் ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் பாதிப்பு குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் 65 சதவீதம் பேர் ஆன்லைன் விளையாட்டை சூதாட்டம் என்றும், அதனை தடை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்பதே நாட்டு மக்களின் ஒரே கருத்தாக உள்ளது. இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

தமிழகத்தில் இந்த சூதாட்டத்தால் பலியாகும் உயிர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. திமுக மட்டுமின்றி அதிமுக, பாமக, மதிமுக, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தடை விதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க ஒரு சட்ட மசோதாவை தமிழக அரசு, சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுமதிக்காக ஆளுநர் ரவிக்கு அனுப்பி வைத்தது.

அது கிணற்றில் போட்ட கல்லாக ஆளுநர் மாளிகையில் கிடக்கிறது. உயிர்ப்பலியைத் தடுக்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு கூட அனுமதி தராத ஆளுநர், மக்கள் மேடையில் விவாதப்பொருளாகி இருக்கிறார்.

இந்த நிலையில் தான் தமிழக ஆளுநருக்கே பதிலடி தரும் வகையில் ஒன்றிய அரசிடம் இருந்து கிரீன் சிக்னல் ஒன்று வந்துள்ளது. பெங்களூருவில் பேட்டி அளித்த ஒன்றிய ரயில்வே மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தான் இந்த கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார். அவர் என்ன சொல்கிறார்?

‘ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அனைத்து மாநிலங்களின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினேன். ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகள், தற்கொலைகள் குறித்து மாநில அமைச்சர்கள் கவலை தெரிவித்தனர்.

ஆன்லைன் விளையாட்டால் பலர் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற விளையாட்டுகள் சமூகத்தின் நல்லிணக்கத்தை பாதிக்கிறது. அனைத்து தரப்பிடமும் ஆலோசனை நடத்த உள்ளோம்.

எனவே ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு புதிய கொள்கைகள் வகுக்கப்படும் அல்லது நாடாளுமன்றம் மூலம் விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும்என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஆக, ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்டம் கொண்டுவர ஒன்றிய அரசே முடிவு செய்துள்ளது. இனியும் இந்த விஷயத்தில் அரசியல் கூடாது. ஒன்றிய அரசின் முடிவை ஏற்றாவது, தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் தரவேண்டும். ரெட் சிக்னல் மாறி கிரீன் சிக்னல்` விழுமா?

படிக்க வேண்டும்

spot_img