உலகிலேயே இரண்டாவது பெரிய பணக்காரராக கௌதம் அதானி மாறியுள்ளதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவிக்கிறது.
அமேசானின் ஜெஃப் பெசோஸ், எல்விஎம்எச் குழுமத் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் ஆகிய உலக பணக்காரர்களை பின்னுக்கு தள்ளி 154.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் கௌதம் அதானி இரண்டாவது இடம் பெற்றிருக்கிறார்.
உலக பணக்காரர்களின் பட்டியலில் 273.5 பில்லியன் டாலர் மதிப்புடன் எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார். கடந்த மாதம் அர்னால்டை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடம் பெற்றிருந்த கௌதம் அதானி, ஜெஃப் பெசோஸ்-க்கு அடுத்த இடத்தில் இருந்தார்.
இப்போது மூன்றாவது இடத்தை பெற்றிருக்கும் அர்னால்ட், 153.5 பில்லியன் டாலர் மதிப்புடன் இருக்கிறார். மேலும், 149.7 பில்லியன் டாலர் மதிப்போடு ஜெஃப் பெசோஸ் நான்காவது இடத்திலுள்ளார்.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் விமிடெட் தலைவரான முகேஷ் அம்பானி, 92 பில்லியன் டாலர் மதிப்போடு உலக பணக்காரர்களின் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளார். இன்று காலை தொடங்கிய பங்கு சந்தை வர்த்தகத்தில் அதானி குழுமத்தின் பங்குகளான அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகியவை புதிய உச்சத்தில் துவங்கின.
யார் இந்த கௌதம் அதானி? 1980களிலேயே கல்லூரிப் படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, சொந்த ஊரான அகமதாபாத்தை விட்டு மும்பைக்குச் சென்று வைர வியாபாரத்தில் இறங்கினார்.
1988ஆம் ஆண்டு தன் சகோதரர்களில் ஒருவரின் பிளாஸ்டிக் ஆலையை நிர்வகிக்க குஜராத் வந்து, தனக்கென சொந்தமாக ஒரு வணிக நிறுவனத்தைத் தொடங்கி தன் தொழிலதிபர் கனவுக் கோட்டைக்கு அடித்தளமிட்டார் அதானி.
அந்த நிறுவனத்தின் பெயர் தான் அதானி என்டர்பிரைசஸ்.1994-ல் இந்திய பங்குச் சந்தையில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தை பட்டியலிட்டார். 1995-ல் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை வென்றார்.
2000-ல் சிங்கப்பூரைச் சேர்ந்த வில்மர் நிறுவனத்துடன் இணைந்து சமையல் எண்ணெய் விற்பனை செய்யத் தொடங்கினார். 2001-ல் சமையல் எரிவாயு விநியோகம் தொடங்கப்பட்டது.
அதன் பிறகு அனல் மின்சார உற்பத்தி, இயற்கை வளங்கள், போக்குவரத்து, மின் பகிர்மானம், பாதுகாப்பு, பழங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ரியல் எஸ்டேட், நிதி சேவைகள், வீட்டுக் கடன் சேவைகள், விமான நிலைய நிர்வாகம், மெட்ரோ ரயில் சேவை, டேட்டா சென்டர், சேலார் மின் உற்பத்தி… என கிடைத்த வியாபாரங்களில் எல்லாம் கால் பதித்தார்.
டாடா, பிர்லா, அம்பானி போல கௌதம் அதானி பரம்பரை பணக்காரரா? இல்லை. ஃபேஸ்புக்கின் மார்க் சக்கர்பெர்க், செர்கி பிரைனின் கூகுள் போல புதிதாக பெரிதாக எதையாவது கண்டு பிடித்தாரா? இல்லை. நூற்றாண்டு காலமாக வியாபாரம் செய்கிறாரோ? அவர் வியாபாரம் செய்யத் தொடங்கியதே 1988-ல் தானே. பிறகு எப்படி இத்தனை குறுகிய காலகட்டத்தில் பெரிய பணக்காரரானார்?
விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் அவரை இந்த நிலைக்கு உயர்த்தி உள்ளன. வரி ஏய்ப்பு, அரசின் அபரிமிதமான சலுகைகள் என அதானி மீது விமர்சனங்களும் எழாமல் இல்லை. அதையெல்லாம் புறந்தள்ளி இன்றைக்கு உலகின் இரண்டாம் பணக்காரராக அவர் உருவெடுத்திருக்கிறார்.
இந்தியாவில் ஏழை&பணக்காரர்கள் இடையே சமநிலை வித்தியாசம் மிகஅதிகமாக இருந்தாலும் அதானியின் இந்த சாதனை இந்தியாவிற்கும் இந்தியர்களுக்கும் பெருமை தரக்கூடியதே.
விரைவில் உலகின் முதல் பணக்காரராக ஓர் இந்தியர் வரவேண்டும். இப்போதைக்கு அதானிக்கு வாழ்த்து சொல்வோம்!



