fbpx
Homeபிற செய்திகள்செப்டம்பர் 18 உலக அறிவாளர் தினம்: அறிவுப் பரவலாக்கத்தில் ‘நுண்ணறிவு’

செப்டம்பர் 18 உலக அறிவாளர் தினம்: அறிவுப் பரவலாக்கத்தில் ‘நுண்ணறிவு’

ஏதேனும் ஒன்றை அறிந்தபின் புரிந்து கொள்ள முனைவது அறிவு எனலாம். கல்வியால் அறிவு விளைச்சல் பெருகிப் பரவத் தொடங்கியது என்றாலும், தேர்ச்சியே அறிவாகக் கருதப்பட்ட காலக்கட்டம் அது.

கல்வி விளைச்சலில், அறுவடை செய்யப்பட்ட தேர்ச்சியே, அறிவானது.
அப்படியென்றால் தோல்வியடைந்தவர்கள் அறிவிலிகளா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இருப்பினும் தேர்ச்சி பெற்றவர்களே கொண்டாடப்பட்டனர்.

அதற்குப் பிந்தைய காலக்கட்டத்தில், கல்வியில் மதிப்பெண்ணும் தேர்ச்சியும் இலக்காக மாற்றப்பட்ட பின்னர், கொண்டாட்டங்கள் பரவலாக்கப்பட்டன. தேர்ச்சி பெருகியது. விளைவு, தேர்ச்சி எண்ணிக்கை பெருக, தோல்வி எண்ணிக்கை குறைந்தது.

ஆம். அறிவு விளைச்சல் பெறத் தொடங்கியது. தேர்ச்சி பெற்றவர்கள் ஒரு வரிசையிலும், தோல்வியடைந்தவர்கள் மறுவரிசையிலும் வைத்து பார்க்கப்பட்ட நிலை மாறி, அறிவாளர்கள் அனைவரும் சம தட்டில் வைத்துப் போற்றினர்.
அறிவில் அனைவரும் சமமானவர்களாகி விட முடியுமா? என்பதற்கு விடைகாணும் சிறு முயற்சியே இக்கட்டுரை.

அறிவாளர்கள் நிறைந்த அவையில், சிறந்தவர்களை எவ்வாறு தேர்வு செய்வது? என்று ஆராயும்போது கண்டறியப்பட்டது தான், நுண்ணறிவு. அறிவு நுண்ணறிவு, அறிவாளர் நுண்ணறிவாளர் பகுத்தறிய வேண்டிய தருணம் இது.

காலம் காலமாக பேசப்பட்டு வரும் தலைப்புகள் தான் அறிவும், நுண்ணறிவும். இன்றைய டிஜிட்டல் உலகம் நுண்ணறிவால் தான் இயங்குகிறது என்றால் அது மிகையாகாது.

நுண்ணறிவு என்பது திட்டமிடுதல், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், பண்பியலாகச் சிந்தித்தல், எண்ணக் கருத்துகளையும் மொழியையும் விளங்கிக் கொள்ளல், கற்றல் போன்ற திறமைகளை உள்ளடக்கிய மனம் ஆகும்.

இதை மதிப்பிட ஜெர்மானிய உளவியலாளர் வில்லியம் ஸ்டெர்ன் என்பவர்,“IQ” (Intelligence Quotient) என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார். ஒருவர் நுண்ணறிவாளரா? என்பதை இதைக் கொண்டு அறியப்படுகிறது.

சொல்வேகத் திறன், எண்ணாற்றல், இட ஆற்றல், எண்ணாற்றல், நினைவாற்றல், புலன்காட்சி வேகம், காரணக் காரிய தொடர்பறிதல் என நுண்ணறிவை வகைப்படுத்துகிறது, தர்ஸ்டனின் விதி.

நுண்ணறிவு ஒற்றைத் திறனை மட்டும் கொண்டதன்று. ஒன்றுக்கும் மேற்பட்ட பல்திறன்களை உள்ளடக்கியது என்பர், உளவியலாளர்கள்.

அறிவாளரை வெல்லும் ஆற்றல் மிக்கவரே நுண்ணறிவாளர் எனக் குறிப்பிடுவது இங்கே பொருந்தும். அறிவுக்கும், நுண்ணறிவுக்கும் இடையிலான வேறுபாடு திட்டமிடுதலும் அதை செயல்படுத்தலுமே.

அறிவாளர் செயலுக்கு ஒரு திட்டம் வகுக்கிறார் என்றால், நுண்ணறிவாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட திட்டங்களை வகுத்து, அதில் வெற்றியும் காண்கிறார். இன்றைய டிஜிட்டல் உலகத்திற்கு அறிவாளர்களை விட, நுண்ணறிவாளர்களின் தேவையே அதிகம்.

நன்றாகப் படித்து, கல்வியில் சிறந்து விளங்கிய போதிலும், தன்னால் ஒன்றைப் பெற முடியவில்லையே என்ற புலம்பல்கள் பலரிடம் இருந்து வெளிப்படுவதுண்டு. அப்படியென்றால் அவர்களுக் கான தேவையில் நமக்கு இடமில் லை என்பதுதான் பொருள்.

‘கடினமாக உழைத்தால் முன்னேறலாம்’ என்ற தன்னம்பிக்கைச் சொலவடை, ‘புத்திசாலித்தனமாக உழைத்தால் முன்னேறலாம்’ என்று மாற்றமடைந்ததைப் போலவே, அறிவாளர்களில் மேம்பட்டுத் திகழ்பவர்கள் நுண்ணறிவாளர்கள் என்று மாற்றமடைந்து வருகின்றனர். அதற்கான தேவைகளும் இல்லாமல் இல்லை.

பன்முக நுண்ணறிவு, உணர்வு சார் நுண்ணறிவு, நுண்ணறிவு ஈவு, செயற்கை நுண்ணறிவு என வகைப்படுத்தப்படுகின்றன.

அமெரிக்கா ஹாவர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹாவர்டு கார்ட்னர் பலவகை நுண்ணறிவுக் கோட்பாட்டை தர்க்க முறையிலான கணித நுண்ணறிவு, இடை நிலையிலான நுண்ணறிவு, உடலியக்கம் தொடர்பான நுண்ணறிவு, இசை தொடர்பான நுண்ணறிவு, சமூக உறவுகள் தொடர்பான நுண்ணறிவு, தான் செயல்படுவதில் திறமையாக இயங்குவதற்கான நுண்ணறிவு, இயற்கையைப் புரிந்து கொள்ளும் நுண்ணறிவு என 8 வகைப்படுத்துகிறார்.

நுண்ணறிவு ஈவு அல்லது நுண்ணறிவு எண் என்பது ஒவ்வொரு வயதிலும் இருக்க வேண்டிய அறிவு வளர்ச்சியைக் காட்டிலும் கூடுதலாக அறிவுக்கூர்மை இருப்பதைக் குறிப்பதாகும். இது சூத்திரத்தின் மூலம் மதிப்பிடப்படுகிறது.

உணர்வு சார் நுண்ணறிவு என்பது மற்றவர்களின் உணர்வுகளை எளிதாகப் புரிந்து கொள்ளுதல், மதிப்பிடுதல் போன்ற பண்புகளைக் கொண்டது. செயற்கை நுண்ணறிவு என்பது மனிதன் சிந்தித்துச் செயல்படுவதைப் போல், ஒரு இயந்திரத்தை உருவாக்கி, அதை கணினியின் வழி செயல்படச் செய்வதாகும்.

மனிதன் ஐம்புலன்களின் வழி செய்யக்கூடிய பணிகளை இயந்திரமே தன்னிச்சையாக செய்து முடிக்கச் செய்வதாகும். வரையறுக்கப்பட்ட நினைவகம், மனதின் கோட்பாடு, சுய விழிப்புணர்வு, தானியக்கத் தொழில்நுட்பங்களுடன் இயங்கக் கூடியது இந்த செயற்கை நுண்ணறிவு.

இன்று கல்லூரிகளில் கணினி அறிவியல் துறையின் கிளையாக, செயற்கை நுண்ணறிவு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. அதிவேகமாகச் சுழலும் இயந்திர உலகில் நுண்ணறிவே பிரதானமாகக் கருதப்படுகிறது.

அதை அடையப் பெற்றவர்கள் மட்டுமே முன்னுரிமை பெறுவார்கள். மற்றவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுவர். அறிவாளர்கள், நுண்ணறிவாளர்களாகத் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டிய காலம் இது.

அறிவார்ந்த சமூகம் என்ற சொல்லாடல், நுண்ணறிவுச் சமூகமாக மாறுமா? என்பதற்குக் காலம் பதில் கூறும்.

கட்டுரையாளர்:
முனைவர் த.சத்தியசீலன்,
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
நவ இந்தியா,
கோயம்புத்தூர்- 641 006.

படிக்க வேண்டும்

spot_img