தமிழகத்தில் வீடுகள், தொழிற்சா லைகளுக்கான மின்கட்டணம் உயருகிறது. அதே நேரம் விவசாயி களுக்கான இலவச மின்சாரம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் 8 ஆண்டுகளாக மின்சார கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. தற்போது மின்சார வாரியத்தின் நிதி நிலைமையை காரணம் காட்டி மின்சார கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட இருக்கிறது.
100 யூனிட் வரை இலவச மின்சாரம் தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில் ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42.19 சதவீதம்) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை.
அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.
வீட்டு மின்நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதியின் படி நிலை கட்டணம் 2 மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் 2.37 கோடி வீட்டு மின்நுகர்வோர்கள் பயன் அடைவார்கள்.
2 மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63.35 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (26.73 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.27.50-ம், 300 யூனிட்டுகள் வரை மின்நுகர்வு செய்யும் 36.25 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (15.30 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.72.50-ம், 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (7.94 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.147.50-ம், 500 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 10.56 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (4.46 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.297.50-ம், 600 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 3.14 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (1.32 சதவீதம்) ரூ.155-ம் மட்டுமே கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
2 மாதங்களுக்கு மொத்தம் 700 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.96 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (0.83 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.275-ம், மொத்தம் 800 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.26 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (0.53 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.395-ம், 900 யூனிட்டுகள் வரை நுகர்வு செய்யும் 84 ஆயிரம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (0.35 சதவீதம்) மாதத்துக்கு ரூ.565-ம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது
புதிய மின் திட்டங்களை அமைப்பதற்கு கடன் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாடு மின்சார வாரியம் இத்தகைய முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
திருத்தப்பட்ட கட்டணம் உடனடியாக அமலுக்கு வராது என்றும் தற்போது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு முன்மொழிவை அனுப்பியுள்ளதாகவும், மாநிலத்தின் பல்வேறு நுகர்வோரின் பரிந்துரைகள் கேட்கப்படும் என்றும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் கட்டணம் குறித்த இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் மின் கட்டண உயர்வுக்கு பல தரப்பினரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அதிமுக, பாஜக கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளன. சில திமுக கூட்டணி கட்சிகளும் மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யக்கோரி உள்ளன.
பொதுமக்களையும் தொழில்துறையினரையும் பாதிக்காதபடி மின் கட்டணம் இருக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே அனைத்து மின் நுகர்வோரின் வேண்டுகோள்!



